ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு கொரோனா பரவல் காரணமாக அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுக்குழுவில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அதுபோன்று ஏதாவது நடக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பும் திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில், பொதுக்குழுவை வேறு இடத்தில் நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் இடத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
ஈசிஆரில் உள்ள விஜிபி அரங்கில் அதிமுக பொதுக்குழுவை நடத்த இறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், “அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை; அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்தலாம்” என்றார்.