ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சர்ச்சை பதிவு : ராம்கோபால் வர்மாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்மு பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. இதனால் அவரது வெற்றியும் உறுதியாகி இருக்கிறது. இந்தியாவின் உயர்ந்த நாற்காலியில் ஒரு பழங்குடியின பெண் அமரப்போவதை நாடே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் திரவுபதி முர்மு குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிட்ட பதிவில் ''திரவுபதி குடியரசுத் தலைவர் என்றால் இதில் பாண்டவர்கள் யார்? முக்கியமாக கவுரவர்கள் யார்?'' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ராம்கோபால் வர்மா மீது தெலங்கானா பாஜக தலைவர் கூடூர் நாராயணா ரெட்டி ராம்கோபோல் வர்மாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தார்.

இதற்கிடையில் தனது பதிவுக்கு ராம்கோபால் வர்மா அளித்துள்ள விளக்கத்தில் “மகாபாரதத்தில் திரவுபதி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த பெயர் மிகவும் அபூர்வமானது என்பதால் அதனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை பதிவிடவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இந்த விளக்கத்தை போலீசார் ஏற்ககூடாது ராம்கோபால் வர்மாவை கைது செய்தே தீர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. மேலும் அவர் மீது லக்னோ போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.