மைசூரு : ”ரோஹித் சக்கரவர்த்தி தலைமையிலான கமிட்டி, மாற்றியுள்ள பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கல்வித்துறையின் குழப்பத்துக்கு, வருவாய்த்துறை பதிலளிக்க வேண்டுமா. இப்பாடத்தை திரும்ப பெற்று, நடப்பாண்டு பழைய பாடங்களையே போதிக்க வேண்டும்,” என பா.ஜ., – எம்.எல்.சி., விஸ்வநாத் வலியுறுத்தினார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:பாடத்திட்டங்கள் விஷயத்தில், அரசு பிடிவாதம் செய்யக்கூடாது. கவுரவ பிரச்னையாக கருதக்கூடாது.
குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிக்கும் விஷயத்தில், பிடிவாதம் காண்பிக்கட்டும். கல்வித்துறையை தரம் உயர்த்துவதை, கவுரவப்பிரச்னையாக எடுத்துக்கொள்ளட்டும்.பாடத்திட்டங்கள் மாற்றுவது, எந்த கட்சியின் நிகழ்ச்சி அல்ல. தற்போது கல்வித்துறை அதோகதியாகிறது. இத்துறையின் குழப்பத்துக்கு, வருவாய்த்துறை பதிலளிக்க வேண்டுமா. நகர அபிவிருத்தித்துறை அமைச்சர் பதிலளிக்கிறார் என்றால், என்ன அர்த்தம். கல்வி அமைச்சர் நாகேஷ் என்ன செய்கிறார்.
ரோஹித் சக்கரவர்த்தி தலைமையிலான கமிட்டி, மாற்றியுள்ள பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்பாடத்தை திரும்ப பெற்று, நடப்பாண்டு பழைய பாடங்களையே போதிக்க வேண்டும்.அரசு இவ்விஷயத்தை தீவிரமாக கருத வேண்டும். இலக்கியவாதிகள், பெற்றோர், வல்லுனர் அடங்கிய கமிட்டியமைத்து விரிவாக விவாதித்து, பாடப்புத்தகங்கள் மாற்றப்பட வேண்டும். பைரப்பா பெரிய இலக்கியவாதி. அவர் பா.ஜ., செய்தி தொடர்பாளர் போன்று பேசக்கூடாது. கல்வி உலகின் அழகை அதிகரிக்க வேண்டுமே தவிர, கட்சிக்கு வக்காலத்து வாங்கக்கூடாது. அவரது பேச்சில் அரசியல் நெடி வீசுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement