ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மாநிலங்களுக்கு இழப்பீடு தருவதை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் இன்று தொடங்கியது. இதில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவதை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2021, டிசம்பர் 31ம் தேதி புதுடெல்லியில் நடந்தது. பின்னர் 6 மாத இடைவெளியில் அடுத்த கூட்டம் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் பல மாநில அமைச்சர்கள் வருவதால், பாதுகாப்பு காரணமாக சண்டிகருக்கு கூட்டம் மாற்றப்பட்டது. அதன்படி ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகரில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களாக இருக்கும் மாநில நிதியமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றியமைப்பது தொடர்பான மாநில அமைச்சர்கள் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் சூதாட்ட விடுதிகள், பந்தய மைதானங்கள், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது.2021-22 ஆண்டில் தமிழகத்தில் 3.2 லட்சம் வர்த்தகர்கள், 1 ரூபாய் கூட ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை. இதை வசூலிப்பது பற்றியும், ஏராளமான பொருட்களுக்கு வரிவிலக்கு, வரிவிலக்கில் இருந்த பொருட்கள் வரிவிதிப்புக்குள் கொண்டு வருவது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதேசமயம் 215க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரிவிதிப்பில் மாற்றம் இருக்காது என தெரிகிறது.ஜிஎஸ்டி கூட்டத்தில் வரிவிதிப்பு மாற்றம், வரிவிதிப்பு ஒழுங்குமுறைப்படுத்துதல் ஆகியவற்றை கடந்து, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவதை நீட்டிப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.  மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு 5 ஆண்டுகளுக்கு தரப்படும் என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது. இது இந்த மாதத்தோடு (ஜூன்) முடிகிறது. கொரோனா காரணமாக கொண்டு வரப்பட்ட ஊரடங்கு, பொருளாதார மந்தம் ஆகியவற்றால் மாநிலங்களுக்கு வரி வருமானம் குறைந்துள்ளது. இதனால் கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் பாஜ ஆளாத மாநிலங்கள் கோரிக்கையாக வைத்துள்ளன. எனவே இதுபற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. ஜிஎஸ்டி வரிவீதத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரிகள் குழு அளித்த பரிந்துரையில், செயற்கைக்கால்கள், எலும்புமுறிவை சரிசெய்யப்படும் மருத்துவ கருவிகள் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியாக 5 சதவீதம் வரிவிதிக்க பரிந்துரைத்துள்ளது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.  மலைப்பிரதேசங்களில் பயணிகள் செல்லும் ரோப்கார் பயன்பாட்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது, இது 5 சதவீதமாக குறைக்கப்படலாம். இதுதொடர்பாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் இமாச்சலப்பிரதேச அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அறுவை சிகிச்சைக்கு பயன்படும் அஸ்டோமி அப்ளையன்ஸ் தொடர்பான பொருட்கள் (பவுச், ஸ்டோமா அட்ஹெசிவ் பேஸ்ட், பேரியர் க்ரீம், இரிகேட்டர் கிட், ஸ்லீவ்ஸ், பெல்ட், மைக்ரோ போர் டேப்) ஆகியவற்றுக்கு தற்போது 12 சதவீத வரிவிதிக்கப்படுகிறது. இது 5 சதவீதமாக குறைக்கப்படலாம். கழிவுநீரில் இருந்து சுத்திகரிக்கப்படும் நீருக்கான வரி நீக்கப்படலாம். டெட்ரா பேக்கிங்கிற்கு தற்போது 12 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது. அது 18 சதவீதமாக உயர்த்தப்படலாம். பேட்டரியில் இயக்கப்படும் வாகனங்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரிவிதிப்பது குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது. பேட்டரி பொருத்தப்பட்டு வரிவிதிப்பா அல்லது பேட்டரி பொருத்தாமல் வரிவிதிப்பா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விளக்கம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2வது நாளாக நாளையும் நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.