இந்திய நகரம் மும்பைக்கு பயணித்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்த விபத்தில் 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
மும்பை கடற்கரையில் இருந்து எண்ணெய் உற்பத்தி நிலைய பகுதிக்கு ஹெலிகாப்டர் ஒன்று பயணித்தது. அதில் 2 விமானிகள், 7 பணியாளர்கள் என மொத்தம் 9 பேர் பயணித்தனர்.
குறித்த ஹெலிகாப்டர் தரையிறங்க வேண்டிய இடத்தில் இருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தொலைவில், எதிர்பாராத விதமாக அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு பேரிடர் அழைப்பு சென்றுள்ளது. உடனடியாக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
கடலில் தத்தளித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் நிறுவன பணியாளர்கள் என்றும், மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்க முற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
PC: PTI
மேலும், கடல் மேல் பயணிக்கும் இத்தகைய ஹெலிகாப்டர்களுடன் மிதவைகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மிதவைகளைப் பயன்படுத்தி ஹெலிகாப்டர் கடலில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.