சென்னை: தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு தடை எதுவும் விதிக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் அணியதாவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டம் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 3 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா என்று மருத்துத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “தடை என்பது போல் எதுவும் இல்லை. எல்லாரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடிப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொது நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு தடை எதுவும் தெரிவிக்கவில்லை. பொதுக் கூட்டம் மற்றும் தெருமுனை கூட்டங்களை நடத்தலாம்.
இந்த நிகழ்ச்சிகளில் அரசு தெரிவித்து இருப்பது போல முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.