சாப்பாட்டுக்கு முன்… சாப்பாட்டுக்குப் பின்… மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவதன் பின்னணி என்ன?

உடல்நலமின்றி மருத்துவரை நாம் அணுகும்போது, மருத்துவர்கள் சில மருந்துகளை உணவுக்கு முன்னரும், சில மருந்துகளை உணவுக்குப் பின்னரும் உட்கொள்ள பரிந்துரைப்பார்கள்.

எல்லா மருந்துகளும் நோயைக் குணப்படுத்தத்தானே, பின் ஏன் இதுபோன்று பரிந்துரைக்கிறார்கள் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கக்கூடும். இந்தச் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், கோவையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

மாத்திரைகள்

முதலில் நமது செரிமான அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உணவை, உமிழ்நீருடன் சேர்ந்து நன்கு மென்று சாப்பிடும்போது உணவுக்குழாய் மூலமாக அந்த உணவு இரைப்பைக்குச் செல்கிறது. அங்கு உணவானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் சில செரிமான நொதிகளுடன் சேர்ந்து, கூழ் போன்று மாற்றப்பட்டு சிறுகுடலுக்குள் செலுத்தப்படும்.

அங்குள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டின் மூலம் உணவு செரிமானமடைந்து, அதில் இருக்கும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் ரத்த நாளங்களுக்குள் கலந்து உணவானது முழு ஆற்றலாக மாற்றப்படுகிறது.

இதே செரிமான முறைதான் மாத்திரைகளுக்கும். மாத்திரைகளும் நன்கு செரித்து, ரத்தத்துடன் கலந்த பின்புதான் அவற்றின் பயன் நமக்குக் கிடைக்கும். உணவு வயிற்றுக்குள் இருக்கும்போது எளிதில் மாத்திரை செரிமானம் அடையாது என்பதால், சில மாத்திரைகளை உணவுக்கு முன்பே எடுக்க வேண்டும். காசநோய், தைராய்டு மாத்திரைகள் எளிதில் செரிமானம் அடையாதவை என்பதால் அவற்றை உணவுக்கு முன்பே எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கப்படும்.

செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்)

சர்க்கரை நோய்க்கான மாத்திரையும் உணவுக்கு முன்பே சாப்பிட்டால்தான், இன்சுலின் சுரந்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். வயிற்றுப்புண்ணுக்கு (அல்சர்) மருந்து எடுத்துக்கொள்ளும் போதும் அமிலத்தன்மை குறைவதற்காக உணவுக்கு முன்பே மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் மாத்திரை, வலி நிவாரணி, எதிர்ப்புச் சக்தி மருந்துகள் போன்றவை வயிற்றில் அல்சர், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும் என்பதால் உணவுக்குப் பின்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

எந்த வேளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுச் சொல்லாத மாத்திரைகளை உணவு சாப்பிட்டு, அரை மணி நேரத்துக்குப் பின்பு சாப்பிட வேண்டும். அந்த நேரத்தில் நாம் சாப்பிடும் உணவும் எளிதில் செரிமானம் அடைவதாக இருக்க வேண்டும்.

மருத்துவர் சசித்ரா தாமோதரன்

உணவும் மாத்திரையும்!

பாலும், தயிரும் செரிமானத்தைத் தாமதமாக்கும் என்பதால் இவற்றை சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். 6 மாத குழந்தைகள் வரை சொட்டு மருந்து, 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தை என்றால் மருந்து கசப்பாக இருக்கும் என்பதற்காகச் சுவை சேர்த்த சிரப்பும் (syrup) கொடுக்கப்படும்.

மாத்திரையில் வீரியத்தன்மை அதிகம். எனவே மாத்திரையாக எடுத்துக் கொள்ளும் வயதில் மாத்திரையாக எடுத்துக் கொள்வதுதான் நல்லது. கசப்பு என்பதால் குழந்தைகள் மாத்திரைகளைத் துப்பிவிடுவார்கள் என்பதற்காகத் தேன் அல்லது பாலில் கலந்து கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு மாத்திரைகளை அப்படிக் கொடுப்பதில் தவறில்லை.

தேன்

சில நேரங்களில் மாத்திரையை விழுங்கியவுடன் சில குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலோ, உடல் முழுதும் தடிப்புகளோ வரும். இது மருந்து ஒவ்வாமையாகும். இதுபோன்று மருந்து ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மாத்திரை சாப்பிட்டவுடன், அல்லது 5 நிமிடங்களுக்குள் வாந்தி எடுத்துவிட்டால், மாத்திரை முழுவதுமாக வெளியே வந்துவிட்டால், மீண்டும் 15- 20 நிமிடங்களுக்குள் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.

மாத்திரை சாப்பிட்ட அரை மணிநேரத்துக்குப் பிறகோ அல்லது மாத்திரை கரைந்திருந்தாலோ மருத்துவரின் பரிந்துரையின்றி அடுத்த முறை மாத்திரை எடுக்கக்கூடாது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் சரியாக இருக்கின்றனவா எனவும், மாத்திரை காலாவதி தேதி எப்போது எனவும் சரிபார்த்து மாத்திரைகளை வாங்க வேண்டும். காலை, மாலை என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டபடி சரியாகப் பார்த்து வாங்க வேண்டும்.

மாத்திரை – சித்தரிப்பு படம்

அதே போல அந்தந்த நேரத்துக்கென பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளைச் சரியான நேரத்தில் சாப்பிடவும். ஏனெனில் சில மாத்திரைகள் சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பதால் இரவு நேரத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் மாத்திரை சாப்பிட்டுவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.

– சுபா ஆறுமுகம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.