ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர், பூத்மஹால் பகுதியில் தையல் கடை நடத்திவந்தவர் கன்ஹையா லால் (40). சமீபத்தில் முகமது நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு கன்ஹையா லால் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதையடுத்து, அவருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அதனால், கன்ஹையா இது குறித்து போலீஸில் புகாரளித்திருக்கிறார். போலீஸாரும் அவரை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கின்றனர். தொடர் மிரட்டல்கள் காரணமாக அவர் கடந்த சில தினங்களாக கடையை திறக்காமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று காலை தனது தையல் கடையை கன்ஹையா லால் திறந்திருக்கிறார். அப்போது இருவர் துணியைத் தைக்கக் கொடுக்க வருவது போலக் கடைக்குள் நுழைந்திருக்கின்றனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கன்ஹையாவை சரமாரியாக வெட்டியிருக்கின்றனர். இதில் அவர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளிகள் அக்கம் பக்கத்தில் ஆட்கள் கூடுவதற்குள், சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்த போலீஸார், கன்ஹையாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். கன்ஹையா தலை துண்டிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் கலவரம் வெடிக்கலாம் என்பதால், அந்தப் பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பின் போது, “குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க முடுக்கிவிடப்பட்டுள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட மிருகத்தனமாக நடந்துகொண்ட குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள். எனவே, அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். உதய்பூரில் வகுப்புவாத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு ஆதரவு கோரி மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியாவிடம் பேசியுள்ளேன்.
இது நமது ஒற்றுமையைக் குலைக்கச் செய்த சதி. இந்தியாவில் ஏற்கெனவே பதற்றம் மற்றும் அவநம்பிக்கை சூழல் நிலவுகிறது. பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் மக்களிடம் அமைதி காக்க வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் தங்கள் குற்றத்துக்குப் பொறுப்பேற்று வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், “தையல்காரரின் தலையைத் துண்டித்துவிட்டோம், நாங்கள் இறைவனுக்காகவே வாழ்கிறோம். அவருக்காகச் சாவோம்” என்று தெரிவித்துள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தை தொடர்ந்து அவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.