ஏ.டி.எம். எந்திரத்தை சூறையாடிய போலீஸ் அதிகாரியின் மனைவி கைது

பெங்களூரு:

ரூ.70 லட்சம் கடன்

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவீந்திரா. இவரது மனைவி சுனிதா. இவர் தேவனஹள்ளியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வீடு கட்டுவதற்காக ரூ.70 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் வாங்கிய கடனுக்கு உரிய தவணையை அவர் சரியாக செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் சுனிதாவின் வீட்டை பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் வீட்டை பறிமுதல் செய்ய கோர்ட்டில் வங்கி அதிகாரிகள் அனுமதியும் பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் சுனிதாவின் வீட்டிற்கு சென்ற வங்கி அதிகாரிகள் வீட்டை பறிமுதல் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்த கடிதத்தை சுனிதாவிடம் கொடுத்தனர். ஆனால் அந்த கடிதத்தை வாங்க சுனிதா மறுத்து விட்டார். இந்த நிலையில் வங்கிக்கு அரிவாளுடன் சுனிதா சென்று உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கதவை உட்புறமாக பூட்டி கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் வங்கியின் முன்பு நின்று கொண்டு வங்கி ஊழியர்களை சுனிதா ஆபாசமாக பேசியதாகதெரிகிறது.

சிறையில் அடைப்பு

மேலும் வங்கியின் முன்பு இருந்த ஏ.டி.எம். எந்திரம், ஏ.டி.எம்.மைய கண்ணாடியை அரிவாளால் சுனிதா அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாகன நிறுத்தும் இடத்திற்கு சென்ற சுனிதா அங்கு நின்று கொண்டு இருந்த வங்கி ஊழியர் ஒருவரின் கார் கண்ணாடியையும் உடைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் அங்கு தேவனஹள்ளி போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சாவித்ரி தலைமையிலான போலீசார் சென்று சுனிதாவை பிடிக்க முயன்றனர். அப்போது சாவித்ரியை, சுனிதா அரிவாளால் தாக்கியதாக தெரிகிறது.

இதனால் சாவித்ரியின் கழுத்தில் காயம் உண்டானது. இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. ஆனாலும் போலீசார் சுனிதாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் சுனிதா மீது 307 (கொலை முயற்சி), 353 (அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் அடைத்தனர். சாலையில் இளநீர் விற்று கொண்டு இருந்த வியாபாரி ஒருவரிடம் இருந்து அரிவாளை சுனிதா பறித்ததும், இதற்கு அந்த வியாபாரி எதிர்ப்புதெரிவித்ததால் அவரையும் அரிவாளை காட்டி மிரட்டியதும் தெரியவந்து உள்ளது. மேலும் ஏ.டி.எம். எந்திரம், ஏ.டி.எம். மைய கண்ணாடி, கார் கண்ணாடி என ரூ.3 லட்சம் பொருட்களை சுனிதா சேதப்படுத்தியதும் தெரியவந்து உள்ளது.

2-வது முறையாக கைது

வீடு கட்ட கடன் வாங்கிய தவணையை சரியாக செலுத்ததால் கடந்த ஆண்டு (2021) சுனிதாவுக்கு வங்கியில் இருந்து நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது. அப்போது வங்கிக்கு கத்தியை எடுத்து சென்ற அவர் வங்கி மேலாளர், ஊழியர்களை கத்தியை காட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தார். இதுதொடர்பாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் சுனிதாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வந்தார். தற்போது அவர் இந்த சம்பவத்தில் 2-வது முறையாக கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.