கடலில் 500 மெகா வாட் காற்றாலை மின் நிலையம் அமைக்க விரைவில் டெண்டர்| Dinamalar

சென்னை :துாத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரத்தில், கடலுக்குள் 500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களை அமைக்க ஆர்வம் உள்ள நிறுவனத்தை தேர்வு செய்ய, மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை, ‘டெண்டர்’ கோர முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள், 8,618 மெகா வாட் திறனில், நிலத்தில் காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன.அவற்றில் இருந்து, மே முதல் செப்., வரை மின்சாரம் கிடைக்கிறது.
தமிழகம், குஜராத் மாநிலங்களில், கடலுக்கு மேல் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க, சாதகமான சூழல் நிலவுகிறது. இதற்கு அதிக செலவாகும் என்பதால், தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.மத்திய அரசு, மின் தேவையை பூர்த்தி செய்வதில் சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அதிகம் அமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்காக, கடலில் காற்றாலை மின் நிலையம்அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள கடலில், 30 ஆயிரம் மெகா வாட் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க வாய்ப்புள்ளது.இதற்காக, தமிழக மின் வாரிய அதிகாரிகள், இம்மாதம் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஸ்காட்லாந்து மற்றும் அதன் அருகில் உள்ள நாடுகளுக்கு சென்று, கடலில்அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையங்களின் தொழில்நுட்பங்களை பற்றி தெரிந்து வந்துள்ளனர்.இந்நிலையில், மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை, தமிழகம் மற்றும் குஜராத் கடலில் தலா, 500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க ஆர்வம் உள்ள நிறுவனத்தை தேர்வு செய்ய விரைவில், டெண்டர் கோர முடிவு செய்துள்ளது.
டெண்டரில் தேர்வாகும் நிறுவனம், தமிழகத்தில் ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும்.அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழக மின் வாரியம் வாங்கும். வாரியம் ஒரு யூனிட்டிற்கு 3.50 ரூபாய் வழங்கும்; அதற்கு மேல் உள்ள விலையை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மின் வாரியம் சார்பில், மத்திய அரசு வழங்கும்.கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின் நிலையங்களில் இருந்து, ஜூன் முதல் ஜன., வரை 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும். இதனால் காலை, மாலையில் ஏற்படும் உச்ச மின் தேவையை சமாளிக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

அதிநவீன துணை மின் நிலையம்

* காற்றாலை மின் நிலையம் அமைக்க, கடற்கரையில் இருந்து கடலில், 25 கி.மீ., – 50 கி.மீ., துாரத்திற்கு இடம் தேர்வு செய்யப்படுகிறது. அங்கு கடலுக்கு அடியில், இரும்பு, கான்கிரீட் போன்றவற்றை உள்ளடக்கிய ராட்சத குழாய், 25 – 40 மீட்டர் ஆழத்திற்கு நிறுவப்படுகிறது. அதன் மேல் காற்றாலை மின் நிலையத்திற்கான டர்பைன் சாதனங்கள் நிறுவப்படுகின்றன

* அந்த மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்து வர, கடலுக்கு அடியிலேயே நவீன துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது

* நிலத்தில் உள்ள ஒரு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, துணைமின் நிலையத்திற்கு எடுத்து வர, அதிக எண்ணிக்கையில் ‘கேபிள்’கள் பயன்படுத்தப்படுகின்றன. கடலுக்கு அடியில் அமைக்கப்படும் துணைமின் நிலையத்தில் இருந்து, அதிநவீன ஒரே ஒரு கேபிள் வழித்தடத்தில் இருந்து மின்சாரம் எடுத்து வரப்படுகிறது
* கடலில் ஒரு மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம், துணை மின் நிலையம், மின் வழித்தடம் அமைக்க, 25 கோடி ரூபாய் செலவாகிறது. நிலத்தில் ஒரு மெகா வாட் திறனில் அமைக்க, ஆறு கோடி ரூபாய் செலவாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.