புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல் செய்தபோது 8 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் யஷ்வந்த் சின்ஹா மனுதாக்கல் செய்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திமுக சார்பில் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், மாயாவதியின் பகுஜன் சமாஜ், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சி வரிசையைச் சேர்ந்த 8 கட்சிகளின் பிரதிநிதிகள் யஷ்வந்த் சின்ஹாவின் வேட்பு மனு தாக்கலின்போது கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் தங்களுடன் ஆலோசிக்கவில்லை என்பதால் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்கப் போவதாக மாயாவதியும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் முர்முவுக்கு ஆதரவு என்று ஒடிசா முதல்வரும் பிஜூ ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக்கும் அறிவித்துள்ளனர்.
இந்த 8 கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கவில்லை. குறிப்பாக, சின்ஹாவின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பழங்குடியினர் நலனுக்கு ஆதரவான கட்சி. ஜார்க்கண்ட் ஆளுநராக பணியாற்றியுள்ள முர்முவும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். எனவே, முர்முவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரிக்கும் என்று தெரிகிறது. ஏற்கெனவே பாஜகவில் இருந்த யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியில் இருந்து விலகி சிறிது காலம் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தார். பின்னர், அங்கிருந்தும் விலகினார். யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க ஆம் ஆத்மி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது யஷ்வந்த் சின்ஹாவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.