அசாம் வெள்ளத்தில் பலியானோர் உடலை தகனம் செய்வதில் சிக்கல்| Dinamalar

சில்சார்: அசாமின் சில்சாரில் வெள்ளம் வடியாததால், இறந்தோர் உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த இரு வாரங்களாக பலத்த மழை பெய்தது. மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது சில இடங்களில் வெள்ளம் வடியத் துவங்கியுள்ளது. ஆனால், சில்சாரில் வெள்ளம் வடியும் அறிகுறியே தெரியவில்லை. இதனால் அங்கு, இறந்தோர் உடலை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மிதந்து வந்த ஒரு பெண் உடலை மீட்புப் படையினர் கண்டெடுத்தனர்.

அந்த உடலில் ஒரு கடிதம் வைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பெண்ணின் மகன் எழுதிய அக்கடிதத்தில், ‘என் தாய் உடலை தகனம் செய்ய பல வழிகளில் முயன்றும் முடியவில்லை; இந்த உடலைப் பார்ப்பவர்கள் தகனம் செய்து விடவும்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இதேபோல் இன்னும் பலர் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் உடலை தகனம் செய்ய வழியின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சில்சாரின் பிரபல டாக்டர் குமார் கந்தி தாஸ், நகரில் இருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ள பங்களாகாட் என்ற இடத்தில் உள்ள தன் மருத்துவமனை வளாகத்தில் உடல்களை தகனம் செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளார்.

குடிக்க நீரின்றி தவிப்பு!

சில்சாரில் பல இடங்களில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அங்கு வசிக்கும் சிலர் கூறியதாவது: ஒரு வாரத்துக்கும் மேலாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறோம். எங்கள் பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் எதுவும் வரவில்லை. மீட்புப் படையினரும் வரவில்லை. தனியார் படகுகள் 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை கேட்கின்றனர். விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வாயிலாக உணவு வழங்குவதாக சொல்கின்றனர். ஆனால், எங்களுக்கு குடிநீர் கூட கிடைக்காமல், தேங்கியுள்ள வெள்ள நீரை குடித்து ஒருவாரமாக பட்டினியால் தவிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.