சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க திட்டம் ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 5 ஆண்டு நீட்டிக்க வேண்டும்: கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் வலியுறுத்தல்

சண்டிகார்: ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை ஒன்றிய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளன. ஜிஎஸ்டி.யை 2017ல் அமல்படுத்திய பிறகு, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக ஒன்றிய அரசு உறுதி அளித்தது. இந்த மாதத்துடன் இந்த 5 ஆண்டு முடிந்து விட்டது. ஆனால், நிதிப் பற்றாக்குறை உள்ளதாலும், முக்கிய வருவாய் ஆதாரங்கள் பறிபோனதாலும் இழப்பீடு காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு மாநிலங்கள், குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகாரில் நேற்று நடந்தது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த நிதியமைச்சர்கள், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கும் காலத்தை ஒன்றிய அரசு மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். அல்லது. மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 சதவீத வருவாய் பங்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆன்லைன் விளையாட்டு: ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம், குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.* காசோலைகளுக்கு 18% வரி: பொம்மை குழு பரிந்துரைநேற்றைய கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான நிதியமைச்சர்கள் குழு, இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தது. அதில், வரி விதிப்பில் மாற்றங்கள் செய்வது, சில பொருட்கள், சேவைகளுக்கு வரி விலக்கு வழங்குவது உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:* ஓட்டல் அறை வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.1,000க்கு கீழ் உள்ளதற்கு வரி விதிப்பு விலக்கு அளித்துள்ளதை ரத்து செய்து விட்டு, 12 சதவீத வரி விதிக்கலாம்.* மருத்துவமனைகளில், ஐசியூ தவிர, நாள் ஒன்றுக்கு ரூ.5,000க்கு மேல் கட்டணம் உள்ள அறை வாடகைக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கலாம். * இண்ட்லாண்ட் லெட்டர், பதிவு அஞ்சல், 10 கிராமுக்கு கீழ் எடை கொண்ட கவர்கள் தவிர, மற்ற அஞ்சலக சேவைகள் அனைத்துக்கும் வரி விதிக்க வேண்டும். * காசோலைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கலாம். * மாநிலங்களுக்கு இடையே தங்கம், நகைகள் மற்றும் நவரத்தின கற்கள் அனுப்புவதில் மோசடியை தடுக்கும் வகையில், குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் ‘இவே’ பில் கட்டாயம் ஆக்குவது பற்றி மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இருப்பினும், இந்த உச்ச வரம்பு மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கலாம். – இவ்வாறு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.