சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா கைது… `திட்டமிட்டு இலக்கு வைப்பதை நிறுத்த வேண்டும்’ – மனித உரிமை ஆணையம்

பிரதமர் மோடிக்கு எதிராக 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தொடுப்பதற்குப் பின்னணியிலிருந்து செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீ குமார், 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதிட உருவாக்கப்பட்ட சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (Citizens for Justice and Peace) அமைப்பின் செயலாளரான மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதால்வத்(Teesta Setalvad) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டீஸ்டா

இந்த நிலையில், அவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா-வின் மனித உரிமை பணிக்குழு (The Working Group on Human Rights in India and the UN) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,”இந்திய அரசு மனித உரிமை பாதுகாவலர்களைத் திட்டமிட்டு இலக்கு வைப்பது நிறுத்தப்பட வேண்டும். சட்டப்பூர்வமான மனித உரிமைப் பணிகளைச் செய்யும் பாதுகாவலர்கள் மற்றும் உரிமையியல் சமூக அமைப்புகளுக்கு எதிரான பழிவாங்கல்கள், மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஜனநாயகத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை இந்தியாவின் சர்வதேச சட்டக் கடமைகளை மீறுவதாகும். இந்தியாவில் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக, டீஸ்டா செதால்வத் அயராது போராடி வருபவர். எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உட்படத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்பவர்களுக்கு டீஸ்டா செதால்வத்தின் கைது பதிலடி மட்டுமல்ல எச்சரிப்பதற்குச் சமம் என்று WGHR உறுதியாக நம்புகிறது.

மோடி

இந்திய அரசியலமைப்பின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் கடுமையாக மீறும் வகையில், அரசு இயந்திரத்தின் அதிகாரத்தையும், சட்டத்தையும் துஷ்பிரயோகம் செய்வதைப் பிரதிபலிக்கும் வகையில் டீஸ்டா கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே, இவரின் கைது மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு (HRDs) இந்திய அரசின் பாதுகாப்பு குறித்து, உள்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எனவே, உடனடியாக டீஸ்டா விடுதலை செய்யப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.