அதிமுகவில் ஒற்றை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுவரை பனிப்போராக இருந்த ஒபிஎஸ் இபிஎஸ் மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சியின் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் இபிஎஸ் முன்னிலையில் உள்ளார். இதனால் முன்னாள் முதல்வரான ஒபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சிலர் ஒபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர். இது ஒபிஎஸ் ஆதரவாளாகளுக்கு மட்டுமல்லாமல் பல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு நிர்வாகி இபிஎஸ் என்று மாற்றப்பட்டது.
இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் ஓரங்கட்டப்படுகிறார் என்ற ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ள நிலையில், கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஓபிஎஸ் கட்சியில் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதோடு தன்னை பலப்படுத்திக்கொள்ளவும் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கைக்கு செக் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் ஒபிஎஸ் தனக்கு எதிராக எடுக்கும் முயற்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட இருவரின் புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து போஸ்டரில் போட்டு “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்கிற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் வரும் சூழலில் திருச்சியில் ஓட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
அதே சமயம் இந்த போஸ்டர்களின் பின்னணியில் வெல்லமண்டி நடராஜன் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகிய இருவரையும் எப்படியாவது ஒன்று சேர்த்து அதிமுக என்கிற கட்சியை உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே வெல்லமண்டி நடராஜன் விருப்பமும், திட்டமுமாக உள்ளது.
அதே சமயம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என்பதால் 2 பேரையும் இணைக்க முயற்சி எடுக்கிறாரா? அல்லது கவிழ்க்க நினைக்கிறாரா? என்று புரியாமல் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் குழம்பியிருக்கின்றனர்.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“