நடிகை மீனாவின் கணவர் காலமானார்
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டி.,யில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வித்யாசாகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.