அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டிருக்கிறார். ஒடிஷா மாநிலத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தவர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டிருக்கிறார்.
2017-ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை தங்கள் வேட்பாளராக நிறுத்தியதன் பின்னால் பா.ஜ.க-வின் அரசியல் கணக்கு இருந்தது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியதன் மூலம், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி-யில் பெருவாரியான பட்டியலினத்தவர்களின் வாக்குகளைப் பெற முடியும் என்று பா.ஜ.க கணக்குப் போட்டது. பா.ஜ.க-வின் கணக்கு சரியாகவே இருந்தது. அந்தத் தேர்தலில் உ.பி-யில் பெரும் வெற்றியை பா.ஜ.க பெற்றது.
தற்போது நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அதேபோன்ற ஓர் உத்தியை பா.ஜ.க கையாள்கிறது. தமது வேட்பாளராக ஒரு பழங்குடி இனத்தவரை பா.ஜ.க தேர்வுசெய்திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் செல்வாக்கு சற்று சரிந்த நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்றால்தான் தங்கள் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய முடியும் என்கிற நிலை பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டது.
அப்படியான சூழலில்தான், ஒடிஷாவைச் சேர்ந்தவரும் பழங்குடி வகுப்பினருமான திரௌபதி முர்முவை தமது வேட்பாளராக பா.ஜ.க தேர்வுசெய்தது. அவரது பெயரை அறிவித்தவுடன், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டது. அதன் மூலம் முர்முவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.
நாட்டின் உச்ச பதவிக்கு பழங்குடி ஒருவரை பா.ஜ.க கொண்டுவருகிறது என்று ஒரு தரப்பினர் பெருமையுடன் பார்க்கிறார்கள். இந்த நிலையில்தான், தி.மு.க-வைத் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வை வைத்து, தி.மு.க-வின் சமூகநீதிக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒரு பெண்மணிக்கு குடியரசுத் தலைவராகும் வாய்ப்பை பா.ஜ.க ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தளவில், குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச தகுதியுள்ள வேட்பாளரைத் தேர்வுசெய்ய இயலவில்லை.
அதனால், நேற்றுவரை பா.ஜ.க-வில் இருந்த மாற்று சமூகத்தை சேர்ந்தவரான யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறித்துள்ளனர். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று இதுவரை பேசிய காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை யாரை ஆதரிக்கப் போகின்றன?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், “இந்தியாவில் பத்து கோடிப் பேருக்கு மேல் பழங்குடி இனத்தவர் இருந்தபோதிலும், அவர்களில் ஒருவர்கூட இதுவரை குடியரசுத்தலைவர் ஆனதில்லை. பழங்குடி இனத்தைச் சேர்ந்த பி.ஏ.சங்மாவை பா.ஜ.க நிறுத்தியபோது பிரணாப் முகர்ஜியை நிறுத்தி காங்கிரஸ் கட்சி பழங்குடியினத்தவரான சங்மாவைத் தோற்கடித்தது.
தற்போது, ஒரு பழங்குடியின வேட்பாளரை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க நிறுத்தியுள்ளது. ஒரு பழங்குடியின பெண்மணியை குடியரசுத் தலைவர் ஆக்குவதை எதிர்ப்பவர்களா சமூக நீதியின் காப்பாளர்கள்…” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.
இஸ்லாமியர், தலித், பழங்குடி என இந்த சமூகங்களைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத்தலைவர் பதவியில் அமரவைப்பது மட்டுமே சமூக நீதி என்று அண்ணாமலை கருதுகிறாரா என்று எதிர்த் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். இஸ்லாமியரான அப்துல் கலாமை பா.ஜ.க குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமரவைத்தது. அந்தப் பெருமை பா.ஜ.க-வுக்கு உண்டு. அதே நேரத்தில், முக்கியமான ஒரு கேள்வியை அவர்கள் எழுப்புகிறார்கள்.
‘அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த நேரத்தில்தான் குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன. இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டார்கள். ஏராளமான இஸ்லாமியர்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு துரத்தியடிக்கப்பட்டார்கள். அவற்றை குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் தடுத்துநிறுத்தினாரா? அந்த சம்பவங்கள் பற்றி அவரது கருத்து என்னவாக இருந்தது?’ என்றெல்லாம் எதிர்த் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதேபோல, தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருந்த நேரத்தில்தான், இந்தியாவின் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி பிரச்னை கிளப்பப்பட்டு பட்டியலினத்தவர்கள் மீது கும்பல் தாக்குதல்கள் நடைபெற்றன.
அதைச் சுட்டிக்காட்டும் எதிர்த் தரப்பினர், ‘மாட்டிறைச்சி விவகாரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பலர் கும்பல் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் இளம் பட்டியலின பெண் ஒருவர் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார். பெற்றோரைக்கூட நெருங்கவிடாமல் அந்தப் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டது. இந்த கொடுமைகளை, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் தடுத்துநிறுத்த முயற்சி செய்தாரா? அல்லது, அவற்றை அவர் கண்டித்தாரா?’ என்று எதிர்த் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
‘குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த நபர்களை உயர்ந்த பதவிகளில் அமரவைப்பது, அடையாள அரசியல். அதனால், அந்த சமூகம் உயர்ந்ததா? அந்த சமூகத்தினர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்ததா?’ என்ற கேள்விகளை அண்ணாமலையை நோக்கி முன்வைக்கும் எதிர்க் கட்சிகள், அடையாள அரசியலுடன் சமூகநீதியைப் போட்டு குழப்ப வேண்டாம் என்கிறார்கள்.