2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை ஒட்டி ருவாண்டாவின் கிகாலியில் 2022 ஜூன் 24 – 25 வரை நடைபெற்ற இருதரப்பு கூட்டத் தொடரில், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பொதுநலவாய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் குழுத் தலைவர்களைச் சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளித்தல், அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பொதுநலவாயம் உட்பட பலதரப்பு மன்றங்கள் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியன குறித்து கலந்துரையாடினார்.
டொமினிகாவின் வெளிவிவகார, சர்வதேச வர்த்தக மற்றும் புலம்பெயர் உறவுகள் அமைச்சர் கலாநிதி கென்னத் மெல்கோயர் டாரோக்ஸ் உடனான சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் முக்கியமான சுற்றுலா தொடர்பான அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடினார். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் நிலவும் உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு சுற்றுலாத் துறையிலான அதிகரித்த பின்னடைவு குறித்த அனுபவங்களை இரு அமைச்சர்களும் பகிர்ந்து கொண்டனர்.
சீஷெல்ஸ் குடியரசின் வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ சில்வெஸ்ட்ரே ராடேகோண்டேவை சந்தித்த அமைச்சர் பீரிஸ், மருத்துவ, சுற்றுலா மற்றும் கடல் தொடர்பான பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற பல நம்பிக்கைக்குரிய முயற்சிகளின் நிலை குறித்து கலந்துரையாடினார். ஆபிரிக்கக் கண்டத்துடன் வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான நுழைவாயிலாக சீஷெல்ஸ் மீது இலங்கை கவனம் செலுத்துவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். சீஷெல்ஸ் விடுத்த கோரிக்கையை அடுத்து, கடல்சார் கண்காணிப்புக்காக 2 ரோந்துப் படகுகளை வழங்கியமைக்காக அமைச்சர் ராதேகொண்டே இலங்கைக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
பங்களாதேஷ் மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஏ.கே. அப்துல் மொமெனுடனான இருதரப்பு சந்திப்பில், உணவு, மருத்துவ உதவி மற்றும் கடன் வரிசை நீட்டிப்பு உட்பட தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவுவதற்காக பங்களாதேஷ் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸிடம் விளக்கினார். இந்த நெருக்கடியான கட்டத்தில் உதவியமைக்காக அமைச்சர் மொமனுக்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார். இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) அரச / அரசாங்கத் தலைவர்களின் ஐந்தாவது உச்சிமாநாட்டை மார்ச் 2022 இல் மெய்நிகர் வடிவில் இலங்கை வெற்றிகரமாக நடாத்தியமையை அமைச்சர் மொமன் சுட்டிக் காட்டினார்.
நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இலங்கை முன்னெடுத்த பல நடவடிக்கைகள் குறித்து கென்யக் குடியரசின் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சரவை செயலாளர் திருமதி. ரெய்செல் ஒமாமோவிடம் விளக்கிய அமைச்சர் பீரிஸ், ஆபிரிக்க நாடுகளின் நல்லிணக்க அனுபவங்களை அறிந்து கொள்வதில் இலங்கை ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். கென்யாவில் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அமைச்சரவை செயலாளர் ஓமனோ, மீண்டெழுவதை ஊக்குவிக்கும் கட்டமைப்பொன்றை ஒவ்வொரு நாடும் உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். கென்யாவில் ஆடைத் துறையில் பல இலங்கை நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதைக் குறிப்பிட்ட அமைச்சரவை செயலாளர் ஓமனோ, கென்ய நிறுவனங்களுடன் ஏனைய தொழில்களில் கூட்டு முயற்சிகளை ஆராயுமாறு இலங்கையை ஊக்குவித்தார்.
மொரீஷியஸ் குடியரசின் வெளியுறவு, பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ அலன் கானுவுடனான இருதரப்பு சந்திப்பில், பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகள் உட்பட கடல் விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை அமைச்சர் பீரிஸ் ஊக்குவித்தார். தீவு நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கள், சுற்றுலாத் துறையிலான ஒத்துழைப்பு மற்றும் உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.
சைப்ரஸ் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அயோனிஸ் கசௌலிடெஸ் உடனான அமைச்சர் பீரிஸின் இருதரப்பு சந்திப்பின் போது, சைப்ரஸில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் மற்றும் தூதரக உதவிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. சைப்ரஸ் வழங்கும் தொழில் வாய்ப்புக்களைப் பாராட்டிய அமைச்சர் பீரிஸ், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு இலங்கை ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு சைப்ரஸ் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸிடம் அமைச்சர் கசோலிடிஸ் விளக்கினார். பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தைக் கையாள்வதிலான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர் கசோலிட்ஸ், முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களை விரைவான அடிப்படையில் செயற்படுத்தியதன் பின்னர் சைப்ரஸ் ஒரு பொருளாதார மாற்றத்தை சந்தித்ததாகக் குறிப்பிட்டார்.
அமைச்சர் பீரிஸ் மற்றும் மலேசிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ சைபுதீன் அப்துல்லா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பல மலேசியர்கள் மலேசியாவின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்துள்ளதாக அமைச்சர் அப்துல்லா தெரிவித்தார். மலேசிய அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்ட அமைச்சர் அப்துல்லா, மலேசியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான தொழில் சந்தையை ஆராயுமாறு இலங்கைக்குப் பரிந்துரைத்தார். பலதரப்பு மன்றங்களில் கடல் தொடர்பான விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு குறித்தும் அமைச்சர்கள் கலந்துரையாடினர்.
ருவாண்டா குடியரசின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் கௌரவ வின்சென்ட் பிருட்டாவிற்கு இடையிலான சந்திப்புடன், அமைச்சர் பீரிஸ் தனது ருவாண்டாவுக்கான விஜயத்தை நிறைவு செய்தார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை ருவாண்டா அரசாங்கம் வெற்றிகரமாக நடாத்தியமைக்காக அமைச்சர் பீரிஸ் அமைச்சர் பிருட்டாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குறிப்பாக பொருளாதார மற்றும் நல்லிணக்கத் துறைகளில் அண்மைக் காலத்தில் ருவாண்டா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை ஊக்குவித்தார். அமைச்சர் பிருட்டா அமைச்சர் பீரிஸுக்கு நன்றி தெரிவித்ததுடன், பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவை நோக்கி ஆபிரிக்க நாடுகள் தமது சொந்தப் பாதைகளை உருவாக்குவதற்கான நம்பிக்கையைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டார். இலங்கையுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியமான பகுதிகளை ஆராயவும் அமைச்சர் பிருட்டா விருப்பம் தெரிவித்தார்.
முன்னதாக, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக, அமைச்சர் பீரிஸ், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் நியூசிலாந்தின் வெளியுறவு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் நனையா மஹூடா ஆகியோருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூன் 28