ஜெர்மனியில், இரண்டாம் உலகப்போரின்போது நாஜிக்களின் வதை முகாமில் 3,500-க்கும் மேற்பட்ட கொலைக்கு துணைபுரிந்ததாக, 101 வயது முதியவருக்குக் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
இது தொடர்பான வழக்கு விசாரணையானது, ஜெர்மனியிலுள்ள நியூருப்பின் பிராந்திய நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. இதில் உள்ளூர் ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்ட இந்த 101 வயதான நபர், நாஜிக்களின் வதை முகாமில் காவலாளியாக பணிபுரிந்ததையும், ஆயிரக்கணக்கான கைதிகளின் கொலைக்கு துணைபுரிந்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
மேலும், குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் ஜெர்மனியில் உள்ள பேஸ்வாக் அருகே விவசாயத் தொழிலாளியாக தான் வேலை செய்ததாகக் கூறினார்.
இருப்பினும் குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர், `இரண்டாம் உலகப்போரின்போது 1942 மற்றும் 1945-க்கு இடையில் பெர்லின் புறநகரில் உள்ள முகாமில் நாஜி படையின் துணை ராணுவப் பிரிவில் பட்டியலிடப்பட்ட உறுப்பினராக பணிபுரிந்தார் என்பது நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதுகிறது’ என ஜெர்மன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் நியூருப்பின் பிராந்திய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உடோ லெக்டர்மேன், “நீங்கள் கூறுவதற்கு மாறாக, வதை முகாமில் நீங்கள் காவலாளியாக சுமார் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தீர்கள் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.
உங்களின் இந்த செயல்பாட்டின் மூலம் இத்தகைய அழிவை நீங்கள் விருப்பத்துடன் தான் ஆதரித்துள்ளீர். அதுமட்டுமல்லாமல் நாடுகடத்தப்பட்ட மக்களை மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதை நீங்கள் பார்த்தீர்கள்” எனக் கூறியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் ஸ்டீபன் வாட்டர்காம்ப், இத்தகைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற ஜெர்மனியில் உள்ள யூதர்களின் மத்திய கவுன்சில் தலைவர் ஜோசப் ஷஸ்டர், “குற்றம்சாட்டப்பட்ட நபர் வயது முதிர்ந்த காரணத்தால் முழு சிறைத்தண்டனையை அனுபவிக்காவிட்டாலும், இத்தகைய தீர்ப்பு வரவேற்கத்தக்கது” எனக் கூறினார்.