தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ராஜ்கிரண் இயக்கத்தில் என் ராசாவின் மனசில படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீனா. தொடர்ந்து ரஜினி, அஜித், சரத்குமார் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானார். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
மீனா தனது குடும்பத்துடன் பெங்களுருவில் வசித்து வந்தார், இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தனது குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மீனா தெரிவித்திருந்தார்.
இதில் மீனாவின் கணவர் வித்யா சாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீனா, சிகிச்சைக்காக கணவருடன் சென்னை வந்தார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வித்யாசாகருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கு இரண்டு நுரையீரல்களும் செயலிழந்தது. இதனால், மாற்று நுரையீரம் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டது.
எனவே மாற்று நுரையீரலுக்காக பதிவு செய்து காத்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நுரையீரல் பிரச்சினை மேலும் தீவிரமடைந்தது.
இதனால் வித்யாசாகர் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவருக்கு ஐசியூவில் எக்மோ சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் வித்யாசாகர் சிகிச்சை பலனளிக்காமல், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48. மீனா கணவர் உயிரிழப்பு திரைத்துரையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கெனவே நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் கடந்த 2014 ஆம் ஆண்டு, மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், கணவரையும் இழந்து வாடும் மீனாவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சரத்குமார் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் அகால மறைவு செய்தி அதிர்ச்சியளிக்கிறது, மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று எழுதியுள்ளார்.
அதேபோல நடிகை குஷ்பு, தனது ட்வீட்டரில்,ஒரு பயங்கரமான செய்தியுடன் எழுந்திருக்கிறேன்.நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“