கீழக்கரையில் கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தாயை பராமரிக்கும் 13 வயது சிறுமி, தனது மழலை பேச்சால் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார். இவர் வறுமையிலிருந்து மீள அரசு உதவி செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த துரை – அமுதா லெட்சுமி தம்பதியரின் மகள் முகிலா. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி முகிலாவின் தாய் அமுதா லட்சுமிக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு கண் பார்வையை இழந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி முகிலாவுக்கு நான்கு வயது இருக்கும்போது அவர் படிக்கும் பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் மூலம் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். சிறுமி பேச்சாற்றல் பயிற்சி தொடங்கிய அந்த நான்கு வயதில்தான் சிறுமியின் தாய் கண் பார்வையை இழந்துள்ளார்.
சிறுமி முகிலாவின் தந்தை துரை, கிராமிய கலைநிகழ்ச்சி நடத்தும் கலைஞராக இருப்பதால் ஒவ்வொரு கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆடிப்பாடி அதன் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து தங்களது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த தடைபட்டதை அடுத்து தற்போது பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இதையடுத்து சிறுமி முகிலா எட்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், காலையில் எழுந்தவுடன் தனது கண்பார்வை இழந்த தாய்க்கு தேவையான உணவு மற்றும் கழிவறைக்கு கூட்டிச் செல்வது உள்ளிட்ட பணிகளை செய்து தனது கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி தாயை பராமரித்து வருகிறார்.
அதோடு சிறுமி முகிலா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முக்கிய பிரமுகர்களை வரவேற்று தனது காந்தக் குரலால் அசத்தி வருவதோடு 28 மாவட்டங்களில் நடைபெற்ற மழலை பேச்சாளர் போட்டிகளில் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும், பதக்கங்களும், கேடயங்களையும் பெற்று மழலை பேச்சாளராக முகிலா அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் தனது குடும்ப வறுமை சூழ்நிலையால் தனது மழலை பேச்சு திறமையை வளர்த்துக் கொள்ள முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மழலை பேச்சாளர் குடும்பம் வறுமையில் இருந்து மீண்டு வருவதற்கும், சிறுமியின் கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர் விஸ்வநாதன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM