புதுடெல்லி: ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகாரணமாக செய்தி இணையதளத்தின் இணை நிறுவனரான முகம்மது ஜுபைர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களின் மத உணர்வை தூண்டி, வெறுப்புணர்வை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா விமர்சித்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதிலும் சமூகவலைதளங்களை டெல்லி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இதில், ‘ஹனுமன்பக்தி’ என்ற பெயரில் பெங்களூரூவில் இருந்து செயல்படும் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜுபைர், ட்விட்டரில் செய்த பதிவும் சிக்கியுள்ளது.
இதுகுறித்து விசாரிக்க ஜுபைரை டெல்லி போலீஸார் கடந்த திங்கள்கிழமை டெல்லிக்கு அழைத்தனர். இதில் ஜுபைர் கூறிய பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி நேற்று முன்தினம் இரவு அவரை கைது செய்தனர்.
ஜுபைர் நேற்று டெல்லி, பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இப்பிரச்சினையில் ஜூன் 20-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் டெல்லி போலீஸார், “முகம்மது ஜுபைர் உள்நோக்கத்துடன் பதிவிட்ட படத்துடனான ட்விட்டில் ஒருகுறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். இதன்மூலம் அமைதியை கெடுத்து, மத நல்லிணக்கதை குலைக்க முயன்றுள்ளார்” எனக் குறிப்பிட்டு ஐபிசி 153ஏ, 295 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்துள்ளனர்.
டெல்லி போலீஸார் ஜுபைர் மீது ஏற்கெனவே 2010-ல் ஒரு வழக்குபதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் ஜுபைரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே இந்த வழக்கின் விசாரணைக்கு அழைப்பதாகக் கருதி தாம் டெல்லி சென்றதாகவும் ஆனால், எந்த முன் அறிவிப்பும் இன்றி புதிய வழக்கில் தன்னை போலீஸார் கைது செய்துள்ளதாகவும் ஜுபைர் புகார் கூறியுள்ளார்.
ஆனால் ஜுபைர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதுடன் தனது கைப்பேசி மற்றும் இதர டிஜிட்டல் சேமிப்பு கருவிகளை ஒப்படைக்க மறுப்பதாக போலீஸார் புகார் கூறியுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
ஜுபைரின் கைது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “உண்மையின் ஒரு குரலை அடக்க முயன்றால் அவருக்காக, ஓராயிரம் குரல்கள் எழும்பும்” என்று கூறி கண்டித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸின் மவுஹா மொய்த்ரா, “தங்கள் எஜமானர்களை திருப்திபடுத்துவதற்காக இந்த கைதை டெல்லி போலீஸார் செய்துள்ளனர்” என விமர்சித்துள்ளார். எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா அமைப்பும் ஜுபைரின் கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.