வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராஜஸ்தானின் உதய்பூரில், தையல் தொழிலாளி தலையை துண்டித்து சமூக வலை தளங்களில் வீடியோவாக வெளியிட்ட கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் சர்வதேச தொடர்புகள் குறித்து என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் மால்டா என்ற நகரில், ஜவுளிக்கடைக்குள் அத்துமீறி புகுந்த இரு மர்ம நபர்கள், அங்கு வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர். இதன் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞர் கன்னையா லால் என்பதும், அப்பகுதி ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த தையல் தொழிலாளி என்பதும், சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜ., செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால், அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இளைஞரை கொடூரமாக கொன்ற கொலையாளிகள் மிரட்டல் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் யாரேனும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் என எச்சரிக்கும் விதமாக ஆயுதங்களை காண்பித்து அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவம் எதிரொலியாக பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தேறின. இதனால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் கொலையாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர கொலைக்கு பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா என சர்வதேச தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement