ராஜஸ்தான்: ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட டெய்லர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்த இருவரும் வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. கன்னையாலாலின் செயலை விரும்பாத இருவர் அவரது தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ராஜஸ்தானில் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணையச் சேவையும் முடக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். இதனிடையே டெய்லர் கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. படுகொலையில் வேறு அமைப்புகள், வெளிநாட்டு தொடர்புகள் இருக்கிறதா? என்பதை என்.ஐ.ஏ. விசாரிக்க உள்ளது. இந்நிலையில், டெய்லர் கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் பன்வர்லாலை பணியிடை நீக்கம் செய்து ஏ.டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பதிவால் தனக்கு வந்த மிரட்டல் குறித்து உதய்பூர் டெய்லர் கன்னையாலால் போலீசார் புகார் தெரிவித்திருந்தார். புகாரை அடுத்து உதவி ஆய்வாளர் தன்வர்லால், இருதரப்பினரை அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில் கன்னையாலால் நேற்று கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.