மும்பை: மும்பையில் கிழக்கு குர்லா பகுதியில் நாயக் நகர் உள்ளது. இங்குள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து போலீஸாரும் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் 9 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரே சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கட்டிடம் பலவீனமாக இருப்பதாக மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியவுடன் அந்தக் கட்டிடம் காலி செய்யப்பட வேண்டும். அவ்வாறு காலி செய்யப்படாததால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்கின்றன.
இங்குள்ள 4 கட்டிடங்களுக்கும் மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. ஆனால் எவரும் தங்கள் குடியிருப்பை காலி செய்யவில்லை. தற்போது மீட்புப் பணிக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். இதன் பிறகு, மற்ற 3 கட்டிடங்களில் வசிப்பவர்களை வெளியேற்றி விட்டு அவற்றை இடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்” என்றார்.