எம்.ஜி.ஆருடன் ஒரு நாள்! #AppExclusive

ம்.ஜி.ஆருடன் ஒரு நாள்… சில கேள்விகள்..!

எம்.ஜி.ஆரின் வீட்டுத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக ‘அன்னை நிலையம்’ என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்கு கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது. அங்கே அவரது தாயாருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

”சினிமாவில் கோயில் காட்சிகளில் தோன்றி நடிப்பதில்லை என்ற கொள்கையை ஏன் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று, பெற்ற அன்னைக்கு கோயில் கட்டிக் கும்பிடும் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்.”அப்படியொரு கொள்கையே எனக்குக் கிடையாதே. என்னைப் பற்றி ஒரு தவறான எண்ணம் பரவியிருக்கிறது. நானோ, கழகமோ கோயிலுக்குப் போகக் கூடாது என்றோ, கடவுள் இல்லையென்றோ பிரசாரம் செய்ததில்லை. கடவுள் பெயரால் நாட்டில் மூடநம்பிக்கைகள் பெருகுவதையும் சோம்பேறித்தனம் வளருவதையும்தான் எதிர்த்து வந்திருக்கிறோம். ‘ஜெனோவா’ படத்தில் நான் நடிக்கவில்லையா! இப்போது ‘பரமபிதா’வில் நடிக்கிறேனே, அதுவும் மத சம்பந்தமான கதைதானே? ‘பெரிய இடத்துப் பெண்’ணில் எல்லோரையும் நான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வதுபோல் ஒரு காட்சி வருகிறதே! சினிமா இருக்கட்டும். சமீபத்தில் மருதமலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்தேனே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?”

”சினிமாவின் மீதுள்ள மோகத்தால் அதில் நடிப்பதற்கு ‘சான்ஸ்’ கேட்டுக் கொண்டும் அநேகர் உங்களிடம் வருகிறார்களா?”

”நல்ல வேளையாக அப்படி வருபவர்கள் இப்போது மிகவும் குறைந்துவிட்டார்கள். இது வளர்ச்சிக்கு அறிகுறியென்றே நினைக்கிறேன்.” 

A day with MGR

”சினிமாத் துறையில் புதுப்புது நடிகர்களும் நடிகைகளும் தோன்ற வேண்டும் என்று சொல்கிறார்களே, அதற்கு நீங்கள் கூறும் வழியென்ன?”

”நான் வெகு நாட்களாகவே இந்தப் பிரச்னையைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்து வந்திருக்கிறேன். 1948-ம் வருடமே கோயம்புத்தூரில் ‘ஜூபிடர்’ சோமு அவர்களிடம் இதைப் பற்றி விவாதித்திருக்கிறேன். நாடகக் கம்பெனிகள் நடத்தி அதில் சிறப்பாக நடிப்பவர்களுக்குச் சினிமாவில் சான்ஸ் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி சினிமாவில் நடிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவ்வப்போது நாடகங்களில் பங்குகொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு யோசனை உருவாகியது. அதை எல்லோரும் வரவேற்கிறார்கள்.

ஆனால், ஏனோ தெரியவில்லை, அது யோசனை அளவிலேயே நின்றுவிட்டது.

பிறகு, சில வருடங்களுக்கு முன் நடிகர் சங்கத்தில் இந்தப் பிரச்னையைக் கொண்டு வந்து விவாதித்தோம். நடிகர் சங்கத்தின் சார்பில் ‘சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு நாடகங்கள் எழுதச் சொல்லி அதில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, அமெச்சூர் நடிகர்களைக் கொண்டு அவற்றை நடிக்க வேண்டும்; பட முதலாளிகள் சிலர் நீதிபதிகளாக அமர்ந்து, திறமைமிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவர்களுக்குத் தங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். ஏனோ தெரியவில்லை, அதுவும் தீர்மானமாகவே இருந்துவிட்டது! நாடகங்களும் வரவில்லை, நடிப்பதற்குக் கலைஞர்களும் முன்வரவில்லை.

அதற்குப் பிறகு, நான் ஃபிலிம் வர்த்தக சபையில் மற்றொரு யோசனையை வெளியிட்டேன். அதாவது, முன்னணியில் உள்ள ஒரு நடிகர் ஒரே சமயத்தில் ஆறு படங்களில்தான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படலாம். அவரை எந்தப் படத் தயாரிப்பாளரும் ஏழாவது படத்தில் ஒப்பந்தம் செய்யக்கூடாது. அதாவது ஒரு நடிகர் ஒரே சமயத்தில் நடிக்கும் படங்களுக்கு உச்சவரம்பு இருக்க வேண்டும் என்று கூறினேன். இதன்படி புது நடிகர்களைப் புகுத்துவது எளிதாகும் என்று கருதினேன். ஆனால், இந்த ஏற்பாடும் ஏனோ நடைமுறைக்கு வராமலே போய்விட்டது!”

”பிரபல நடிகர்களின் பெயரில் கலை மன்றங்கள் தோன்றுவதால் வீண் சச்சரவுகள் வளரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?”

”நான் அப்படி நினைக்கவில்லை. கலை மன்றங்கள் அமைப்பது ரசிகர்களைப் பொறுத்த விஷயம். என் பெயருள்ள மன்றங்களில் கழகத் தோழர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று நினைப்பது தவறு. மற்றக் கட்சித் தோழர்களும் இருக்கிறார்கள். அரசியல் நோக்கமே இல்லாமல் கலைக்காகவே அதில் அநேகர் இருக்கின்றனர். இந்த மன்றங்களை நான் பணம் கொடுத்து நடத்துவதாகச் சிலர் சொல்லுவதை மறுக்கிறேன்.”

A day with MGR

”சினிமா போஸ்டர்களையும் பேனர்களையும் கிழித்தும், அவற்றின் மீது சேற்றை வாரி அடித்தும் ஆபாசப்படுத்துவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

”சாதாரணமாக என் படங்களும் சிவாஜி கணேசனின் படங்களும்தான் இம்மாதிரி அவதிக்கு ஆளாகின்றன. நானோ, சிவாஜியோ ஆட்களைத் தூண்டிவிட்டு இப்படிச் செய்வதாக அநேகர் நினைக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டை நான் ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை. ஆர்வமிக்க எங்களுடைய ரசிகர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பதையும் நான் நம்பவில்லை. போஸ்டரைக் கிழிப்பது, நாசப்படுத்துவது போன்ற காரியங்களில் சாதாரணமாகப் பொழுதுபோகாதவர்கள்தான் ஈடுபடுவது வழக்கம்!”

A day with MGR

எம்.ஜி.ஆர். காபி அருந்துவதில்லை, வெற்றிலை சுவைப்பதில்லை, புகை பிடிப்பதில்லை. ஆகவே, அவருடைய நண்பர்களில் சிலர் தம் எதிரில் புகை பிடிக்கத் தயங்குவதாகக் கூறினார் அவர். இவரிடம் பெருமதிப்புக் கொண்ட மதுரை நண்பர் ஒருவர், ‘எம்.ஜி.ஆரின் உருவத்தைப் போஸ்டரில் கண்டால்கூட சிகரெட்டை மறைத்துக்கொண்டு விடுவாராம். சற்றுத் தொலைவு சென்ற பிறகுதான் மீண்டும் புகைப்பாராம்!

”சில வருடங்கள் நடிகராக இருந்துவிட்ட அனுபவத்தைக் கொண்டே படத்தின் டைரக்டராகி விடலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?”

”என்னை மனத்தில் வைத்துகொண்டே இந்தக் கேள்வியைக் கேட்பதாகத் தோன்றுகிறது! நான் டைரக்டர் ராஜா சந்திரசேகரின் மாணக்கன். அவரிடம் டைரக்ஷனின் நுணுக்கங்களை நிறையப் பயின்றிருக்கிறேன். டைரக்ஷன் என்பது சாதாரண விஷயம் அல்ல.

கதையைப் பற்றியும் கதாபாத்திரங்களைப் பற்றியும் ஒரு கதாசிரியனுக்குத் தெரிந்ததற்குமேல் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். தன் மனத்தில் உருவாகும் கற்பனைக் காட்சியை எந்த அளவுக்கு காமிரா படம் பிடிக்கும் என்று தெரிய வேண்டும். தாம் எதிர்பார்க்கும் உணர்ச்சியை எந்த அளவுக்கு நடிகர் பிரதிபலிக்க முடியும் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு காட்சியைப் படமாக்கும்போது, அந்தக் காட்சி, படத்தை முழுமையாகப் பார்க்கும்போது எவ்வாறு இருக்கும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கும் திறமையும் இருக்க வேண்டும். கதாபாத்திரங்களின் தன்மையும் கதையின் ஓட்டமும் பாதிக்கப்படாமல் படத்தை எடுத்து முடிக்க வேண்டும்!”

A day with MGR

”நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?”

”நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், அதுவும் முக்கியமாக ‘என் தங்கை’ நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சிவசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். அது ரொம்பவும் இயற்கையாக இருக்கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே ‘கிளிசரின்’ போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதேபோல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை.

ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்துபோய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்து கொண்டேன். நானும் பிறரைப்போல் ‘கிளிசரின்’ போட்டுக்கொள்ள ஆரம்பித்தேன்.”

”உங்களுக்கு வெளிநாடுகளுக்குப் போக வேண்டுமென்ற விருப்பம் இல்லையா?”

”நிறைய இருக்கிறது. நாடகக் கம்பெனியுடன் ஒருமுறை பர்மாவுக்குச் சென்றிருக்கிறேன். வேறு எங்கும் போனது கிடையாது. இலங்கையிலிருந்து ஒருமுறை அழைப்பு வந்தது. ‘விசா’வும் கிடைத்தது. ஆனால், நமது சர்க்கார் என்ன காரணத்தாலோ ‘பாஸ்போர்ட்’ கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த வருஷம் செப்டம்பர் மாதம் மலேயாவில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி ஓர் அழைப்பு வந்திருக்கிறது. மறுபடியும் சர்க்காரை அனுமதி கேட்கப்போகிறென். பாஸ்போர்ட் கிடைத்தால் போய் வருவேன்!” என்றார் அவர் பொருள் பொதிந்த புன்முறுவலுடன்!  

(02.08.1964 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.