புதுச்சேரி: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 7 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து பிஆர்டிசி ஊழியர்கள் பணிக்குத் திரும்பி மதியம் முதல் அரசு பஸ்கள் இயங்கத் தொடங்கின.
புதுவை அரசு போக்குவரத்துக்கழகமான பிஆர்டிசி டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் கடந்த 23ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. கிராமப்புற பகுதியில் பஸ் வசதியின்றி மக்கள் அவதிப்பட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் போராடக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தையின் போது ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட 12 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்வருடன் பேசி முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவித்தனர். இதனால் இன்றும் 7வது நாளாக பிஆர்டிசி ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இந்த நிலையில், முதல்வர் ரங்கசாமியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா, சம்பத் எம்எல்ஏ மற்றும் போராட்டகுழுவினர் பங்கேற்றனர். அப்போது, “பணிக்கு திரும்பி பஸ்களை இயக்குங்கள். கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுகிறேன்” என்று முதல்வர் உறுதியளித்தார்.
இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு ஊழியர்கள் பிற்பகலில் பஸ்களை இயக்கினர். அப்போது நிர்வாகிகள் கூறுகையில், “முதல்வர் வாக்குறுதி தந்துள்ளார். அத்துடன் போக்குவரத்துத்துறைக்கு தனி இயக்குநர் நியமிப்பதுடன் புதிய பஸ்கள் வாங்குவதாக தெரிவித்தார். மேலும் ஊழியர்கள் ஊதியம் உயரத்தி தருவதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து பணிக்கு திரும்பினோம்” என்று குறிப்பிட்டனர்.