அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் சொத்துகுவிப்பு புகார் வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக 11 கோடி ரூபாய் சொத்து சேர்த்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறாத காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “வழக்கு விசாரணையை முறையாக விசாரித்து. லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தினால், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், “வழக்கில் விரைவாக விசாரணையை முடித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிரான வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிரவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.