பாடும் வானம்பாடி: `டிஸ்கோ' என்ற வார்த்தை அறிமுகம்; நடனத்தால் அசத்திய நாகேஷ் மகன் ஆனந்த் பாபு

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘பாடும் வானம்பாடி’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids

பிப்ரவரி 1985-ல் வெளியான ‘பாடும் வானம்பாடி’ ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். இந்தியில் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற ‘டிஸ்கோ டான்ஸரின்’ தமிழ் ரீமேக் இது. ஆனந்த் பாபு ஹீரோவாக நடித்த இந்தத் திரைப்படம் அவரின் ஸ்டைலான நடனத்திற்காகவும் பாடல்களுக்காகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தத் திரைப்படத்தின் வெற்றியை ஒரே வார்த்தையில் சுருக்கிச் சொல்லி விடலாம். அது ‘டிஸ்கோ’. ஆம். டிஸ்கோ என்கிற வார்த்தையின்மீது தமிழகம் பித்துப் பிடித்துக் கொண்டிருந்த நேரம் அது. வளையல் கடைகளில் டிஸ்கோ வளையல், டிஸ்கோ பொட்டு, டிஸ்கோ ரிப்பன் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். பெண்ளுக்கு இந்த சமாசாரங்கள் என்றால் ஆண்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?! ‘டிஸ்கோ கட்டிங்’ என்பது அப்போது சிகையலங்காரக் கடைகளில் புழக்கத்தில் இருந்த ஸ்டைல். ‘டிஸ்கோ சாந்தி’ என்கிற பெயரில் நடிகையையும் விட்டு வைக்கவில்லை.

பப்பி லஹரி

டிஸ்கோ படுத்திய பாடு

உண்மையில் டிஸ்கோ என்பது என்ன? டிஸ்கோதே என்கிற பிரெஞ்சு வார்த்தையின் சுருக்கம். அமெரிக்க நகர்ப்புற நைட் கிளப்களில் இசைக்கப்படும் இந்த நடன இசை வகையானது, 1970ல் புகழ்பெற்றது. அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்கள், இத்தாலியர்கள், ஸ்பானியர்கள் போன்ற இனக்குழுக்களில் ஒரு கலவையாக இந்த இசைப்பாணி புழக்கத்தில் இருந்தது. அடிப்படையில் 4/4 தாளகதியின் துடிப்பில் சிந்தசைஸர்கள், நரம்பு மற்றும் ஊதுகுழல் வாத்தியங்கள், எலெக்ட்ரிக் கிடார்கள் போன்ற இசைக்கருவிகளை வைத்து இசைக்கப்படுவது ‘டிஸ்கோ’வின் ஆதார வடிவம்.

டிஸ்கோ இசையை இந்தியச் சினிமாவில் பிரபலப்படுத்தியவர் என்று இசையைமப்பாளர் ‘பப்பி லஹரி’யை சொல்லலாம். அவர்தான் இந்தி வடிவமான ‘டிஸ்கோ டான்சருக்கு’ இசையமைத்தார். மிதுன் சக்ரவர்த்தி ஹீரோவாக நடித்த அந்தப் படம் மெஹா ஹிட் படமாக அமைந்தது.

நாகேஷ் என்கிற, தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தவருக்கு மூத்த மகனாகப் பிறந்த ஆனந்த் பாபு, ‘பாடும் வானம்பாடியில்’ தான் அறிமுகம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘தங்கைக்கோர் கீதம்’ என்கிற திரைப்படத்தில் நெகட்டிவ் கலந்த பாத்திரத்தில், ஆனந்த் பாபுவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் டி.ராஜேந்தர்.

ஆனந்த் பாபு சினிமாவிற்குள் வந்தது எப்படி?

உண்மையில் ஆனந்த் பாபுவிற்கு நடிப்பின்மீது துளிகூட நாட்டமில்லை. சினிமாத்துறைக்குள் வருவதை அவர் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. ‘தான் ஒரு மருத்துவராக வேண்டும்’ என்பதுதான் இளம்வயது முதலே ஆனந்த்பாபுவின் கனவும் லட்சியமும். இது தவிர விளையாட்டிலும் நிறைய ஆர்வமுண்டு. டென்னிஸ் பிடித்த விளையாட்டு. இப்படியொரு சூழலில், கல்லூரியில் நடந்த கலைநிகழ்ச்சியில் ஆனந்த் பாபுவும் கலந்து கொள்ள விரும்பினார். ஆனால் பியானா வாசிப்பதைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியவில்லை. “நடிப்பியா… டான்ஸாவது ஆடுவியா?” என்று நண்பர்கள் கேட்க சங்கடத்துடன் ‘இல்லை’ என்று தலையசைத்தார் பாபு. அப்போது நண்பர்களில் ஒருவர் கேட்ட கேள்விதான் ஆனந்த் பாபுவின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. “அத்தனை பெரிய ஸ்டாரான நாகேஷோட புள்ளையா இருந்துக்கிட்டு டான்ஸ் கூடவா உனக்கு ஆட வராது?”

ஆனந்த் பாபு

நண்பன் கேட்ட கேள்வி சங்கடத்தையும் வருத்தத்தையும் பாபுவிற்கு ஏற்படுத்தியது. நேராக வீட்டுக்குச் சென்றார். அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டார். மேற்கத்திய இசையில் ஆங்கிலப் பாடல்களை தொடர்ந்து ஒலிக்க விட்டார். கண்ணாடி முன் நின்று வெறி பிடித்தது போல் பாடலுக்கேற்ற நடன அசைவுகளை சொந்தமாக உருவாக்கி ஆடி ஆடிப் பழகினார். கலைத்திறமை என்பது அவரது ரத்தத்தில் உள்ளதுதானே? கடுமையான இந்த உழைப்பிற்குப் பின்னால் அரைமணி நேரத்திற்கு தொடர்ந்து ஆடுவதற்கான பயிற்சியை சுயகற்றலில் எடுத்துக் கொண்டு கல்லூரி கலைவிழாவிற்குச் சென்றார். மேடையில் தன் திறமையை பாபு அரங்கேற்ற வியப்பின் உச்சத்திற்கே சென்ற மாணவர்கள் கைத்தட்டி தீர்த்தார்கள். பாராட்டு மழை பொழிந்தது.

நாகேஷின் மகன் என்பதால் பாபுவின் நடனத்திறமை பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவர படத்தயாரிப்பாளர்கள் மொய்க்கத் துவங்கினார்கள். ஆனால் மகனின் விருப்பத்திற்கு எதிராக நாகேஷ் எதையும் செய்ய விரும்பவில்லை. ஒரு நெருக்கமான தயாரிப்பாளர் வேண்டிக் கேட்டதாலும், கல்லூரியில் இணைவதற்கு சிறிது காலம் இருந்ததாலும் “இந்த ஒரு படம் பண்றியாப்பா?” என்று நாகேஷ் கேட்ட அந்த நொடிதான் ஆனந்த்பாபுவின் வாழ்க்கை திசையை மாற்றியது. டி.ராஜேந்தரின் இயக்கத்தில் ‘தங்கைக்கோர் கீதம்’ திரைப்படத்தில் அறிமுகமானார் ஆனந்த்பாபு. ‘தினம் தினம் உன் முகம்’ என்கிற பாடலுக்கு ஸ்டைலாக நடனமாடியதால் பாபுவிற்கென்றே தனிப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள். இதனால் மருத்துவ கனவைக் கைவிட்டு விட்டுத் தந்தையின் பாதையைப் பின்பற்றி நடிப்புத்துறைக்குள் தாவினார் ஆனந்த் பாபு.

ஆனந்த் பாபு – பிரபுதேவாவின் முன்னோடி

பிரபுதேவாவின் அபாரமான நடனத்திறமையை நாம் இன்று பிரமிக்கிறோம். அவரின் கடுமையான உழைப்பு அளப்பரியது என்பது உண்மைதான். ஆனால் அவர் நடனமாஸ்டரின் மகன் என்பதால் அந்தத் துறையில் விற்பன்னர் ஆனதில் வியப்பில்லை. ஆனால் சினிமாவில் விருப்பமேயில்லாத ஆனந்த் பாபு, சுயகற்றலில் நடனம் ஆட தோ்ச்சி பெற்றதை நிச்சயம் வியந்தாக வேண்டும். இந்த வகையில் ஆனந்த் பாபுவை பிரபுதேவாவின் முன்னோடி எனலாம். அந்தச் சமயத்தில் சிறப்பாக நடனம் ஆடத்தெரிந்த ஹீரோக்கள் குறைவு. கமல் போன்று அரிதானவர்களே இருந்தார்கள். இந்தச் சமயத்தில் நவீன வகையிலான நடன பாணியை சுயமாக கற்றுக் கொண்டு அதை வெள்ளித் திரையில் சிறப்பாக வெளிப்படுத்தியதில் ஆனந்த் பாபுவின் திறமை தனித்துவமானது. ஏறத்தாழ பிரபுதேவா அளவிற்கான புகழை ஆனந்த் பாபு அடைந்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு. அது என்னவென்று பார்ப்போம்.

ஆனந்த்பாபு

ஆனந்த் பாபுவின் கலைப்பயணம் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. அதில் இறக்கமே அதிகம். முதல் படத்தில் கிடைத்த புகழ் ஆனந்த் பாபுவை உற்சாகமாக வழிநடத்திச் சென்றது. இதற்குப் பிறகு கடமை, புயல் கடந்த பூமி, நியாயம் கேட்கிறேன் என்று சில திரைப்படங்களில் நடித்து வந்த ஆனந்த்பாபுவை ‘பாடும் வானம்பாடி’ திரைப்படமானது, புகழின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. இதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அடுத்து சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் குறைந்தன. சில நண்பர்களுடனான சோ்க்கை என்பது அவரை தீய பழக்கங்களுக்கு இட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

‘ஆனந்த்பாபு இறந்து விட்டார்.. போதையில் சாலையில் விழுந்து கிடக்கிறார்’.. என்றெல்லாம் ஊடகங்களில் வம்புச் செய்திகள் இறைபட்டன. “மது அருந்துவது என் தனிப்பட்ட பழக்கம். ஆனால் நான் சாலையில் விழுந்து கிடந்ததை யாராவது பார்த்திருக்கிறார்களா? தங்களின் வணிகத்திற்காக ஏன் மற்றவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்ப வேண்டும்?” என்று ஆதங்கப்படும் ஆனந்த் பாபு, இது போன்ற செய்திகளை ஒரு புன்னகையுடன் கடந்து சென்றிருக்கிறார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த் பாபுவின் நண்பர் என்பதால் அவரின் மூலமாக ஆனந்த் பாபுவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியது. புரியாத புதிர், சேரன் பாண்டியன் என்று சில படங்களில் மீண்டும் நடிக்கத் துவங்கினார். விக்ரமன் இயக்கத்தில் புது வசந்தம், பாலசந்தர் இயக்கத்தில் வானமே எல்லை, அனந்து இயக்கத்தில் சிகரம் போன்றவற்றை ஆனந்த் பாபு நடித்தவற்றில் முக்கியமான திரைப்படங்கள் என்று சொல்லலாம். 99-ல் மறுபடியும் காணாமல் போனார் ஆனந்த் பாபு. அதே காரணம்தான். கூடாநட்பு, தீய பழக்கங்கள் போன்றவை அவரை முடக்கிப் போட்டன.

ஆனந்த்பாபு

ஏறத்தாழ பத்து வருடங்கள் கழித்து 2009-ல் ‘ஆதவன்’ திரைப்படத்தின் மூலம் மறுபடியும் ஆனந்த் பாபுவை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார் பாபு.

டிஸ்கோ டான்சரின் தமிழ் வடிவம்

‘பாடும் வானம்பாடி’ திரைப்படத்தின் கதை என்பது மிகச் சம்பிரதாயமான, வெகுசன சினிமாவின் வடிவம்தான். கடத்தல் தொழில் செய்யும் முதலாளியின் துரோகத்தால் அப்பாவி டிரைவர் சிறைக்குச் செல்ல அவரின் குடும்பம் தத்தளிக்கிறது. மூத்த பிள்ளை எங்கோ ஓடிப் போகிறான். மீதமிருக்கும் மகனையும் மகளையும் வைத்துக் கொண்டு குடும்பத்தைப் பராமரிக்க சிரமப்படுகிறார் தாய். முத்து என்கிற ஒரு நல்லவரின் உதவியால் சாலையில் ஆடிப்பாடி காசு சம்பாதித்து கொண்டு வருகிறான் சிறுவன்.

முன்கதை முடிந்து அனைவரும் பெரியவர்களாகின்றனர். ஒரு பிரபல டான்ஸருக்கு மேனேஜராக இருக்கும் ஒருவர், டான்ஸர் செய்யும் அவமதிப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறி “ஒரு சிறந்த டான்ஸரைக் கண்டுபிடிப்பேன்” என்று சபதம் ஏற்கிறார். சாலையோரத்தில் ஆடிப்பாடும் ஓர் இளைஞனைக் கண்டெடுத்து அவனுடைய திறமைக்கு வெளிச்சம் தருகிறார். இதற்கிடையில் பழைய வில்லனின் இடையூறுகள், வாரிசுகளின் காதலின் மூலம் வருகின்றன. அனைத்தும் தீர்ந்து பிரிந்த குடும்பம் எவ்வாறு ஒன்று சோ்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

பாடும் வானம்பாடி

பாடிய வானம்பாடிகள் யார், யார்?

இந்த சம்பிரதாயமான கதையைத் தாண்டி, ‘பாடும் வானம்பாடி’ திரைப்படத்தின் சிறப்பே நடனமும் பாடல்களும்தான். இந்தியில் பப்பி லஹரி இசையமைத்த அட்டகாசமான பாடல்களுக்கு சங்கர் – கணேஷ் அருமையான முறையில் தமிழ் வண்ணம் பூசியிருந்தார்கள். ‘வாழும் வரை போராடு’ என்கிற பாடலின் வரிகள் எப்போது கேட்டாலும் நம்முடைய மனச்சோர்வை நீக்கி உத்வேகம் தருபவை. ‘மாடி வீட்டு சன்னல் கூட சட்டையைப் போட்டிருக்கு; ஊருக்குள்ள சின்னப்புள்ள அம்மணமாயிருக்கு’ என்று பாடல் வரிகளில் கம்யூனிசம் பேசியிருந்தார் வைரமுத்து.

‘நானொரு டிஸ்கோ டான்சர்’, ‘அடி கண்ணே.. இளம் பெண்ணே’ என்கிற ரகளையான மெட்டுகளுக்கு, இந்தியின் வாசனை அடிக்காமல் அற்புதமான வார்த்தைகளை எழுதியிருந்தார் வைரமுத்து. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உற்சாகத்தைப் பற்றி கேட்கவா வேண்டும்? இந்த இரண்டு பாடல்களையும் ஷாம்பெயின் பொழிவது போல் அட்டகாசமாகப் பாடியவர், ‘என் நினைவுதானே ஏங்குதே’ என்கிற சோகப்பாடலையும் அருமையான பாவத்தில் பாடியிருப்பார். ‘வெற்றி என்னும் மாலை உண்டு.. உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு’ என்பது போன்ற பொருத்தமான வரிகளை இன்னொரு பாடலுக்காக நா.காமராசன் எழுதியிருந்தார். பி.சுசீலா பாடிய ‘அன்பே.. அன்பே.’ என்கிற இனிமையான பாடலும் உண்டு. ‘ஆட்டத்தில் நானேதான் ராஜா.. ராஜா’ என்கிற பாடலை மலேசியா வாசுதேவன் சிறப்பாகப் பாடியிருந்தார். ஏறத்தாழ அனைத்துப் பாடல்களிலும் டிஸ்கோ பாணியிலான இசையை வைத்து இந்த ஆல்பத்தை ஒரு கொண்டாட்ட அனுபவமாக்கியிருந்தார் பப்பி லஹரி.

பாடும் வானம்பாடி

பாடல்கள் ஒருபுறம் கொண்டாட்ட அனுபவத்தைத் தந்தது என்றால் ஆனந்த்பாபுவின் நடன அசைவுகள் ஒவ்வொன்றும் பிரமிப்பையும் உற்சாகத்தையும் தந்தன. முன்னரே சொன்னது போல் ‘பிரபுதேவாவின் முன்னோடி’ என்று பாபுவை நிச்சயம் சொல்லலாம். ஒரு காலை மட்டும் மடித்து மடித்து அவர் ஆடும் ஒரு ஸ்டெப்பிற்கு பார்க்கும் நமக்குத்தான் முட்டி வலிக்கும். தரையில் உடலால் வட்டம் போட்டு ஆடுவது, கால்களை மடித்து மடித்து சுற்றுவது என்று பல சிக்கலான நடன அசைவுகளை முகத்தில் புன்னகையுடன் இலகுவான முறையில் ஆடியிருப்பார் ஆனந்த் பாபு. நடிப்பு என்று பார்த்தால் குறிப்பிட்ட எல்லையில் மட்டுமே நின்று விடும். குரங்கின் அசைவுகளை கவனித்து வில்லனின் ஆட்களை ஆனந்த் பாபு பந்தாடும் ஒரு சண்டைக்காட்சி பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

ஆனந்த்பாபு – நாகேஷ் – ஜீவிதா – நிழல்கள் ரவி – ஜனகராஜ்

நிழல்கள் ரவியை ஒரு டான்ஸராக கற்பனை செய்து பார்ப்பதெற்கெல்லாம் அசாதாரணமான நெஞ்சுரம் வேண்டும். இயக்குநருக்கு அது இருந்திருக்கிறது. இதில் ஆனந்த் பாபுவின் போட்டி டான்ஸராக நடித்திருப்பார் ரவி. வில்லனின் மகள் என்றால் அது ஹீரோவின் காதலியாகத்தானே இருக்க வேண்டும்? அந்தச் சம்பிரதாயத்தை குறைவில்லாமல் நிறைவேற்றினார் ஜீவிதா. தன்னுடைய அண்ணனின் போட்டி ஆட்டக்காரர் என்பதால் முறைத்துக் கொண்டே ஆனந்த்பாபுவிற்கு தொல்லை தருவதும் பின்பு ‘இவன்தான் தன் பால்ய சிநேகிதன்’ என்பதை அறிந்து உருகுவதும், தந்தையின் கண்டிப்பை மீறி காதலில் உறுதியாக இருப்பதும் என்று தன் பங்களிப்பை சரியாகச் செய்திருந்தார் ஜீவிதா.

பாடும் வானம்பாடி

பணக்கார வில்லனாக நடிப்பதெல்லாம் செந்தாமரைக்கு அநாயசமான பணி. எனவே பளபள கோட்டைப் போட்டுக் கொண்டு சுருட்டைக் கடித்து அசால்ட்டாக நடித்து போய் விட்டார். வெளிநாடுகளில் வேலை செய்தவர்போல் தன்னை சித்தரித்துக் கொள்ளும் ‘டுபாக்கூர்’ ஆசாமியாக ஜனகராஜ் நடித்திருந்தார். மணி என்கிற தன்னுடைய லோக்கல் பெயரை மாற்றிக் கொண்டு ‘மிஸ்டர் பெல்.. நீ இதைப் பத்தி என்ன நெனக்கறே?’ என்று தன்னிடமே பேசிக் கொண்டிருக்கும் நகைச்சுவையை ஜனகராஜ் இயல்பாகக் கையாண்டார். செந்தாமரையின் சதியாலாசனை நண்பராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி, காமெடிக்கு துணை நின்றார். ஆனந்த்பாபுவின் மூத்த அண்ணனாக ராஜீவின் குணச்சித்திர நடிப்பு சிறப்பாக இருந்தது. பாசத்துடன் கண்ணைக் கசக்கும் அம்மாவாக மணிமாலா வந்து போனார். (இவர்தான் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி என்கிற முக்கியத் தகவல் 2K கிட்ஸ்களுக்கானது).

கௌரவ வேடத்தில் வந்து போனாலும் நாகேஷின் பாத்திரம் முக்கியமானது. நிஜ வாழ்க்கையில் நாகேஷூம் ஆனந்த் பாபுவும் தந்தை –மகன் என்பது பார்வையாளர்களுக்குத் தெரியும். எனவே இதில் சென்டிமென்ட் வேல்யூக்காக குரு – சிஷ்யன் என்கிற மாதிரியான உறவாக சித்தரிக்கப்பட்டது. இந்த மாற்றம் கதையின் படி பொருத்தமாகவே இருந்தது. நாகேஷ் தன்னுடைய பிரத்யேகமான பாணியில் கால்களை விரித்து ஆடுவதை ஆனந்த் பாபுவும் சில காட்சிகளில் பின்பற்றினார். பாட்டு மற்றும் நடனம் சொல்லித் தந்து பிழைப்பு நடத்துவதின் மூலம் சிறுவனின் குடும்பத்தை ஆதரிக்கும் ‘முத்தண்ணன்’ என்கிற பாத்திரத்தில் ஆரம்பத்தில் வருவார் நாகேஷ். அதன் பிறகு கிளைமாக்ஸில் மட்டுமே வருவார். தாயின் மரணம் காரணமாக பாட முடியாமல் தவிக்கும் ஆனந்த்பாபுவிற்கு ஊக்கமளிப்பவர் இவர்தான்.

தொலைந்து போன இயக்குநர்

இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் எம்.ஜெயக்குமார். பிரபல இயக்குநர் ராஜசேகரின் பாணியில் பெயருக்குப் பின்னால் B.Sc., என்று டைட்டிலில் போட்டுக் கொண்டார். ‘பாடும் வானம்பாடி’யின் வெற்றிக்குப் பின்னால் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. ராம்கி, நிஷாந்தியை வைத்து இவர் உருவாக்கிய ‘காதல் விடுதலை’ என்கிற திரைப்படம் ஏறத்தாழ முடியும் தறுவாயில் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வெளிவராமலேயே போனது. இதனால் இதர படங்களும் முடங்கி இயக்குநர் வேலையை கைவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு சென்ற பரிதாபமெல்லாம் நிகழ்ந்தது.

பாடும் வானம்பாடி

எண்பதுகளிலேயே இந்தத் திரைப்படத்தை ஸ்டைலாக இயக்கியிருந்தார் ஜெயக்குமார். டைட்டில் கார்டில் ஆடும் வண்ண நிழலான உருவங்களே ஆரம்ப உற்சாகத்தை நமக்குத் தந்து விடும். ஆனந்த் பாபு அறிமுகமாகும் காட்சி, மைக்கேல் ஜாக்சன் பாடலின் பின்னணியோடு வண்ண விளக்குகள் ஒளிர அட்டகாசமாக இருக்கும். அனைத்துப் பாடல்களும் மிக நோ்த்தியாக படமாக்கப்பட்டிருந்தன. ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபுவின் பங்களிப்பும் பிரத்யேகமாக குறிப்பிடப்பட வேண்டியது.

‘பாடும் வானம்பாடி’ ஒரு வெகுசன திரைப்படம்தான் என்றாலும் பப்பி லஹரியின் அட்டகாசமான இசை, அவற்றை சங்கர் –கணேஷ் ரகளையாக தமிழிற்கு கடத்தி வந்த விதம், ஆனந்த்பாபுவின் சிறப்பான நடனம், ஜெயக்குமாரின் இயக்கம் போன்வற்றிற்காக என்னென்றும் நினைவுகூரத்தக்க ஒரு படைப்பாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.