இந்தியா – இலங்கை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார்.
அண்டை நாடான இலங்கையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள், மருந்துகள், உணவுப் பொருட்கள், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் திண்டாடுகிறார்கள். மேலும், விலைவாசி உயர்வு அவர்களை வாட்டி வதைக்கிறது.
இந்நிலையில், இலங்கை மீன்வளத் துறை அமைச்சரும், தமிழர் கட்சி ஒன்றின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியா – இலங்கை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்து விட்டது. இதனால், எந்த நேரத்திலும் போக்குவரத்து தொடங்கும். இலங்கையின் வட பகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்துக்கும், இந்தியாவின் புதுச்சேரிக்கும் இடையே இந்த சரக்கு கப்பல் இயக்கப்படும்.
ஜூலை 10 வரை பள்ளிகள் மூடல் – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இடையே இது இலங்கைக்கு நிவாரணமாக அமையும். இந்தியாவில் இருந்து எரிபொருள், மருந்து, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மலிவு விலையிலும், எளிதாகவும் இலங்கைக்கு கிடைக்கும். சரக்கு கப்பல் போக்குவரத்துக்கான ஆரம்பக் கட்ட பணிகளை தொடங்க போகிறேன். இது போல், யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்துக்கும், தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இடையே ஜூலை மாதம் 1 ஆம் தேதி விமான போக்குவரத்து தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.