லைஃப் ஸ்டைலை மாற்றுவேன் என்றவர், கூலிப்படையால் கொல்வேன் என்கிறார் -ரூ.2.50 கோடி கிரிப்டோகரன்சி மோசடி

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி அனுராதா(41). இவர் அதேபகுதியில் உள்ள டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு, சமையல் மசாலா அரைத்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், இவருடைய தோழி ஐஸ்வர்யா கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் நிறுவனத்தில் நாம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய அனுராதா ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதற்கு தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 6 மாதங்கள் வரை கூறியபடி பணம் அனுப்பியவர்கள் கடையை மூடிவிட்டு மறைந்தனர்.

பிட் காயின்

இந்நிலையில் மீண்டும் ஐஸ்வர்யா, பெங்களூருவில் கிரிப்டோகரன்சி முதலீடு நிறுவனம் உள்ளது. அதில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே ஏமாற்றமடைந்த போதும் ஐஸ்வர்யா கூறியபடி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

மாதம், மாதம் அவருக்கு அந்த தொகை கிடைத்து வந்தது. அப்போது, அந்த நிறுவனத்தினர் உங்கள் வீட்டு அருகில் உள்ளவர்களை முதலீடு செய்ய வைத்தால் உங்களுக்கு நல்ல கமிஷன், வருமானம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர். நிறைய பணம் கிடைக்கும் என்ற ஆசையில், அனுராதா தனது நண்பர்கள் மற்றும் வீட்டு அருகில் உள்ளவர்களை இந்தத் திட்டத்தில் சேர்த்துவிட்டுள்ளார். அவர்களுக்கு மாதந்தோறும் கூறியபடி பணம் செலுத்தப்பட்டு வந்தது.

இருதயராஜ்

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக யாருக்கும் பணம் கிடைக்கவில்லை. இதனால் முதலீடு செய்தவர்கள் அனைவரும் அனுராதாவிடம் பணத்தை கேட்க ஆரம்பித்தனர். அனுராதாவும், பணத்தை திருப்பி தரும்படி அந்த நிறுவன உரிமையாளர்களிடம் கேட்டு வந்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று அறியாத அனுராதா தனது கணவருடன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார்.

இது குறித்து அனுராதாவிடம் பேசினோம். இலங்கையைச் சேர்ந்த இருதயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெங்களூருவில் பிட்ஸ்கார்ட் என்ற பெயரில் மளிகை, துணி உள்பட வீட்டுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அதே போல் இருதயராஜ், கனடா நாட்டில் கிரிப்டோகரன்சி மைனிங் செய்து வருவதாக எங்களிடம் கூறினார். மேலும் கிரிப்டோகரன்சியில் அதிக முதலீடு செய்து வைத்து இருப்பதாகவும் கூறினார்.

பிட் காயின்

அவரைப் போல நாமும் முதலீடு செய்யலாம் என முடிவெடுத்தேன். முதற்கட்டமாக வங்கியில் கடன் வாங்கி ரூ.8 லட்சம் முதலீடு செய்தேன். எனக்கு முறையாக பணம் கிடைத்து வந்தது. இதனையறிந்த எனது ஊரைச் சேர்ந்தவர்களும் முதலீடு செய்ய முன் வந்தனர். மொத்தம் 483 பேர் சேர்ந்து 7 கோடியே 75 லட்சம் ரூபாய் வரை கொடுத்தோம்.

அதில் 5 கோடி ரூபாய் வரை திருப்பக் கொடுத்துள்ளார். மீதமுள்ள 2 கோடியே 75 லட்சம் ரூபாய் தர வேண்டி உள்ளது. இந்தத் தொகையை திருப்பி கேட்டால், எங்களை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கிறார்கள். எங்கு வேணாலும் போய் கம்ப்ளைன்ட் கொடு எல்லாத்தையும் என்னால் சமாளிக்க முடியும். உன்னை கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவேன் என்கிறார். மதுரையை போலவே பல மாவட்டங்களிலும் இந்த மோசடி நடந்து உள்ளது.

இருதயராஜ்

நிறுவன உரிமையாளரான இருதயராஜ் ஆரம்பத்தில் ஒரு பிட் காயின் மூலம் உங்கள் தலைமுறையை செழிக்கப் போகிறது. என்னிடம் 200 பிட் காயின்கள் உள்ளன. உங்களின் லைஃப் ஸ்டைலை மாற்றுகிறேன். மூன்றாயிரம் உறுப்பினர்கள் நம்முடன் உள்ளனர். அடிக்கடி மீட்டிங் நடத்துவது உத்வேகம் அளிப்பது கஷ்டம் நீங்கி வாழ்வில் பெரிய இடத்தை அடையலாம். போனஸ் கிடைக்கும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கலாம் எனப் பேசினார். ஒன்றரை ஆண்டுகள் நன்றாக போனது. கடந்த 4 மாதங்கள் பணம் கிடைக்காததால் அவரிடம் கேட்ட போது நஷ்டம் அடைந்துள்ளேன். பணம் கிடைத்ததும் தருகிறேன். அதுவரை என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றார். என்னை நம்பிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கியில் கடன் பெற்று சேர்ந்தவர்கள் எனக் கூறினேன். எனக்கு எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது பார்க்கலாம். இல்லையென்றால் எங்கு வேண்டுமானாலும் போய் கேஸ் கொடு என மிரட்டினர். போலீஸிடம் போனால் மிரட்டுவேன் என்றதால் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றார் அனுராதா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.