`பூ' ராமு: உற்ற தோழர்; கண்டிப்பான அப்பா; குழந்தைகளுக்கு `சாக்லேட் தாத்தா' – மகள் மகாலட்சுமி

எண்ணிச் சொல்லும் படங்களில் நடித்திருந்தாலும் எண்ணிலடங்கா ரசிகர்களின் இதயங்களைக் கொய்துவிட்டது நடிகர் ‘பூ’ ராமுவின் மரணம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தபடி, தன் படங்களிலும் முற்போக்குக் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர். ஆண் பிள்ளைகள்தான் செய்யவேண்டும் என்ற வழக்கத்தை உடைத்து, இறுதி மரியாதையை அவரின் மகள் செலுத்தியிருப்பது அனைவரது நெஞ்சத்தையும் நெகிழ வைத்திருக்கிறது. ஆறுதல் கூறிவிட்டு ‘பூ’ ராமுவின் மகள் மகாலட்சுமியிடம் பேசினோம். அப்பாவுடனான நினைவுகளை விகடனுடன் பகிர்ந்துகொண்டார்.

‘பூ’ ராமு

“அப்பான்னாலே அன்கன்டிஷனல் லவ்தான். யாராச்சும் உதவின்னு கேட்டு வந்துட்டா இல்லேன்னு சொல்லமாட்டார். முடிஞ்சவரைக்கும் பண்ணிடுவார். முடியலைன்னாலும் நண்பர்கள் மூலம் செஞ்சுடுவார். அவரோட உழைப்பும் உதவும் குணமும் ரொம்பப் பிடிக்கும். நாடகக்குழு, கட்சிப்பணி, ஆட்டோ ஓட்டுநர், பிரின்டிங் வேலை, தற்போது நடிகர் என, கடைசி மூச்சுவரை உழைச்சிக்கிட்டே இருந்தார். இறப்பதற்கு முன்புகூட ‘ராட்சசி’ பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கும் படத்திற்காக மூணு நாள் ஷூட்டிங் போய்ட்டு வந்தார். அப்படியொரு கடின உழைப்பாளி. ஆனால், கண்டிப்பானவர்.

எங்க பாட்டி இறப்புக்குப் பிறகு அப்பா ஊரப்பாக்கத்தில் தனியாகத்தான் வசித்துவந்தார். நானும் கணவரும் வில்லிவாக்கத்தில் வசித்தாலும், வாரம்தோறும் அப்பாவைப் பார்க்கப் போய்டுவோம். படங்களில் அப்பாவைப் பல விதங்களில் பார்த்திருக்கலாம். ஆனால், எங்ககிட்ட ஒரே மாதிரிதான். அதாவது, கண்டிப்பா இருப்பார். எதுவா இருந்தாலும் கரெக்ட்டுன்னா கரெக்ட்டு, தப்புன்னா தப்புன்னு வெளிப்படையா சொல்லிடுவார்.

அன்பை செயற்கையா காட்டத் தெரியாது. அவரின், கண்டிப்பு அக்கறை நிறைஞ்சதாவும் அர்த்தமாவும் இருக்கும் அதேநேரம், என் பொண்ணு மகிமாஶ்ரீ கிட்ட அன்பா இருப்பார். குழந்தையாவே மாறி குதூகலமா விளையாட ஆரம்பிச்சிடுவார். என் பொண்ணு மட்டுமல்ல, அவர் வீட்டுல இருந்தாலே பக்கத்துவீடு, எதிர்வீட்டுக் குழந்தைங்களும் விளையாட வந்துடுவாங்க. குழந்தைங்கன்னா உயிர். வீட்ல எப்பவும் சாக்லேட் வச்சிருப்பார். ‘சாக்லேட் தாத்தா’ன்னுதான் குழந்தைங்களும் கூப்பிடுவாங்க. அப்பாவுக்கு மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார்னா ரொம்பப் பிடிக்கும். அவங்க போட்டோவையும் வீட்டுல ஓவியமா தொங்கவிட்டிருந்தார். அவங்க ஓவியத்தைக் காட்டி குழந்தைங்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்.

‘பூ’ ராமு

பெரியவங்கன்னு இல்லை. குழந்தைங்ககிட்டகூட ’சாதி பார்க்கக்கூடாது. எப்பவும் பகுத்தறிவோட இருக்கணும். பகுத்தறிவோட நடக்கணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பார். செயலிலும் அதைக் கடைப்பிடித்தவர் அப்பா.

உழைச்சிக்கிட்டே இருந்த அப்பாவுக்கு முதுமையின் காரணமா அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போய்டும். தொடர்ந்து ஹோமியோபதி மருத்துவம் எடுத்துக்கிட்டு வந்தார். மருத்துவமனையில் சேர்க்கிற அளவுக்கெல்லாம் உடம்பு முடியாமப்போகலை.

போனவாரம் வியாழக்கிழமை சாதாரணமா உடம்பு முடியலைன்னு தனியார் மருத்துவமனைக்குப் போய் ஊசி போட்டுக்கிட்டு வந்தார், அன்னைக்கு நைட்டு உடம்பு இன்னும் மோசமாகிருக்கு. எதிர்வீட்டு அக்கா, எங்களுக்கு போன் பண்ணிச் சொன்னதும் ஜி.ஹெச் கூப்பிட்டுப் போனோம். மூச்சுத் திணறல் அதிகமாகவே அப்பாவை வென்ட்டிலேட்டர்ல வைக்க வேண்டியதாகிடுச்சு. கடைசியா நான் அப்பாவைப் பார்க்க வந்தப்போகூட ’டெஸ்ட் எடுத்தேன். ஒன்னும் பிரச்சினை இல்லை. இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இருப்பேன்’ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னார். அந்தச் சிரிப்பு அதுக்குள்ளே மறைஞ்சிடும்னு நாங்க எதிர்பார்க்கல” என்று கண்கலங்கும் மகாலட்சுமி, மேலும் தொடர்கிறார்.

`பூ’ ராமு

” ’என்னோட வாழ்க்கை ஒரு வரலாறுன்னு நான் இறந்த அன்னைக்கு உங்களுக்குத் தெரியும். என்னை அன்னைக்குப் புரிஞ்சிக்குவீங்க’ன்னு அப்பா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பார். அவர், சொன்னமாதிரியே இறுதிச் சடங்கப்போதான் அவரோட வாழ்க்கை ஒரு வரலாறுன்னு தெரியும். முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் அறிக்கை விட்டிருந்தார். உதயநிதி ஸ்டாலின் நேரடியாகவே வந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத் தோழர்கள் இறுதி நிகழ்வை ஏற்று நடத்தினார்கள். ’நான் செத்துட்டா எந்த சடங்கும் பண்ணக்கூடாது. அப்படியே கொண்டுபோய் எரிச்சிடணும்’னு சொல்வார். அவர், சொன்னமாதிரியே எந்த இறுதிச்சடங்கும் செய்யலை. கற்பூரம் மட்டும் கொளுத்தி மரியாதை செலுத்தினோம்.

அப்பாவைத் தெரியும் என்பதைத் தாண்டி, அவரை உணர்ந்தது இறப்பின்போதுதான். அதேபோல, அப்பாவுக்கு இவ்ளோ ரசிகர்கள் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கலை. எல்லோருக்கும் ரொம்ப நன்றி!

மகாலட்சுமி

அப்பா கண்டிப்பா இருந்தாலும் பாசத்தைச் செயலில்தான் காட்டுவார். எனக்கு இப்போ 34 வயசாகுது. அவருடன் வாழ்ந்தது சில வருடங்கள்தான். நான் குழந்தையா இருக்கும்போது எப்படி இருந்தேனோ, அதை அப்படியே நண்பர் மூலம் ஓவியமா வரைந்து எங்க வீட்டுல மாட்டி வச்சிருக்கார். கண்டிப்பான அப்பாவோட அன்பைப் புரிஞ்சிகிட்ட தருணம் அது. அப்பாவோட நினைவுகளோடு, அந்த ஓவியம் எப்பவும் நெகிழ்ச்சியைக் கொடுத்துக்கிட்டே இருக்கும்” என்று உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் மகாலட்சுமி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.