சொந்த வீடு வாங்க கோதுமை, பூண்டு இருந்தால் போதும்: ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆச்சரிய அறிவிப்பு
சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் பல வருடங்களாக பணம் சேர்த்து வைக்க வேண்டும் அல்லது லோன் வாங்கி வீடு வாங்க வேண்டும் என்பது தான் தற்போதைய நிலையாக உள்ளது.
சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு என்பதும், சொந்த வீடு வாங்குவதற்காக பல தியாகங்களை மக்கள் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி கவுன்சில்: 3 துறைக்கு முக்கிய அறிவிப்பு.. சிறப்பான வரி சலுகை..!
இந்த நிலையில் சீனாவில் சொந்த வீடு வாங்குவதற்கு பணம் தேவையில்லை, பூண்டு மற்றும் கோதுமை இருந்தால் போதும் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் சொந்த வீடு
இந்தியா போலவே சீனாவில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சொந்த வீடு என்பது ஒரு நீண்டகால கனவாகவே இருந்து வருகிறது. சொந்த வீடு இருக்கும் இளைஞர்களுக்கு மட்டும் தான் பெண் கிடைப்பதால் பலர் சொந்த வீடு வாங்கும் முயற்சியில் உள்ளனர்.
ரியல் எஸ்டேட் துறை
ஆனால் அதே நேரத்தில் சமீபத்திய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு சீனாவில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல மாதங்களாக வேலைக்கு செல்லாமல் பொதுமக்கள் இருப்பதால் கையில் உள்ள பணம் கரைந்து அத்தியாவசிய செலவுக்கே திண்டாட்டமாக இருக்கும் நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
சொந்த வீடு கனவு
தற்போது சீனாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பல இடங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீடு வாங்கும் கனவு கிட்டத்தட்ட இளைஞர்களின் மனதில் இருந்து நீங்கி விட்டதாகவே கருதப்படுகிறது. சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தை கடந்த ஜனவரி மாதம் முதல் பெரும் சரிவை கண்டுள்ளது என அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையை ஆய்வுசெய்த புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது.
சலுகைகள்
சீனாவிலுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் கட்டிமுடிக்கப்பட்ட ஏராளமான வீடுகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் இதனால் வீடு வாங்கும் முதலீட்டாளர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மானியம்
வீடு வாங்குபவர்களுக்கு இலவச வாகன நிறுத்துமிடங்கள், சிறிய அளவிலான முன்பணம் கொடுத்து மீத தொகையை தவணை மூலம் செலுத்துதல், மானியம் உள்பட பல்வேறு சலுகைகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இருப்பினும் சீன மக்களிடம் தற்போது பொருளாதார நிலை மிகவும் மந்தமாக இருப்பதால் சொந்த வீடு வாங்கும் அளவிற்கு பணம் இல்லாத நிலை உள்ளது.
கோதுமை பூண்டுக்கு வீடு
இந்த நிலையில் சீனாவின் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று புதுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் கோதுமை மற்றும் பூண்டு ஆகியவற்றை செலுத்தி வீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மீதி பணத்தை மாதாந்திர தொகையாக செலுத்தினால் போதும் என்றும் விளம்பரம் செய்துள்ளது.
விவசாயிகளுக்கு இலக்கு
சீனாவிலுள்ள என்ற ஹெனான் என்ற பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் கோதுமை மற்றும் பூண்டு பயிரிட்டு வரும் நிலையில் அந்த விவசாயிகளை குறிவைத்தே இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அறுவடை நேரம் என்பதால் விவசாயிகள் ஏராளமான கோதுமை மற்றும் பூண்டுகளை வைத்திருப்பார்கள் என்றும் அந்த அறுவடை செய்த கோதுமை அல்லது பூண்டுகளை அப்படியே கொடுத்துவிட்டு சொந்த வீடு வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜூலை 10 கடைசி தேதி
இந்த நிலையில் சீனாவில் உள்ள ரியல் எஸ்டேட் முகவர் ஒருவர் அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது ‘ஹெனான் பகுதியில் உள்ள பூண்டு மற்றும் கோதுமை விவசாயிகளை இலக்காகக் கொண்டே இந்த சலுகையை அறிவித்து உள்ளோம் என்றும் ஜூலை 10 ஆம் தேதி இந்த சலுகை முடிவடைந்து விடும் என்றும் அதற்குள் இந்த சலுகையை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
15 நாட்களில் 800 பேர்
மேலும் கோதுமை மற்றும் பூண்டுக்கு பதிலாக சொந்த வீடு என்ற அறிவிப்பு வெளியான 15 நாட்களில் சுமார் 800 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் கோதுமை, பூண்டை கொடுத்து வீட்டை முன்பதிவு செய்துள்ளார்கள் என்றும் அந்த முகவர் மேலும் கூறியுளார்.
வரவேற்பு
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்பணமாக பெரும் கோதுமை மற்றும் பூண்டுகளை சந்தையில் நல்ல லாபத்தில் விற்று பணமாக்கிக் கொள்கின்றனர் என்றும், இந்த பண்டமாற்றுமுறை அறிவிப்புக்கு விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
Garlic and Wheat Accepted as a Home Down Payment in China!
Garlic and Wheat Accepted as a Home Down Payment in China | சொந்த வீடு வாங்க கோதுமை, பூண்டு இருந்தால் போதும்: ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அறிவிப்பு