சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜி.எஸ்.டி வரி தொடர்பான நடைமுறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் அவ்வப்போது கூடி முடிவெடுக்கும். அந்த வகையில், 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், எவற்றுக்கெல்லாம் வரி விகிதத்தை மாற்றி அமைப்பது, எவற்றுக்கெல்லாம் வரி விலக்கை ரத்து செய்வது ஆகியவை குறித்து குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்துக்குப் பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில் வரி விலக்குகள் சிலவற்றை ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், பல பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு வரியை உயர்த்தவும் செய்துள்ளனர். எதற்கெல்லாம் வரி உயர்த்தப்பட்டுள்ளது, வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி விவரம் இனி…
1. ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வாடகை உள்ள ஓட்டல் அறைகளுக்கு இருந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு 12% ஜி.எஸ்.டிடி வரி விதிக்கப்பட்டுள்ளது.
2. பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, பொரி அரிசி, தயிர், லஸ்ஸி, மோர், பனீர் போன்றவற்றுக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது.
3. எல்.இ.டி பல்பு, கத்தி, பேனா மை, பிளேடு போன்ற பொருள்கள் மீதான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
4. சூரியசக்தியில் தண்ணீர் சுடவைக்கும் இயந்திரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
5. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
6. தண்ணீர் எடுக்கும் மோட்டார் பம்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
7. வங்கிக் காசோலைகளுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
8. ஒரு நாளைக்கு 5000 ரூபாய்க்கு மேற்பட்ட மருத்துவமனை அறை வாடகைக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது.
9. அஞ்சல் அட்டை, உள்நாட்டுக் கடிதம், புக் போஸ்ட் ஆகியவை தவிர, அனைத்து அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
10. சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் வரிச் சுமை போகப் போக குறையும் என்று நினைத்த மக்களுக்கு இந்த வரி மேலும் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியையே தந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி, சூதாட்டம், லாட்டரி போன்றவற்றுக்கு 28% வரி விதிப்பது பல முறை விவாதிக்கப்பட்ட நிலையில் அதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதை நீட்டிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம் என்கிறார்கள் நிபுணர்கள்!