முன்னாள் திமுக எம்.எல்.ஏ., மீண்டும் திமுகவில் இணைகிறாரா?!

மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், கடந்த அதிமுக ஆட்சியின் போது, மதுரை  திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ.,வாக ஆனார். 

பின்னர், திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து டாக்டர் சரவணனுக்கு மதுரை மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

பின்னர், கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்த சரவணன் மீண்டும் திமுகவில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவல் மதுரை மாவட்ட பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த தகவல் குறித்து தற்போது சரவணன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நான் பாஜகவின் மதுரை மாவட்ட தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் எங்களது மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், மதுரை மாவட்டத்தில் எனது தலைமையிலும் பாரதிய ஜனதா கட்சி அபார வளர்ச்சி பெற்று வருகிறது. 

இந்நிலையில், ஆளுங்கட்சியில் நான் சேர போவதாக யாரோ வதந்தி பரப்பி வருகின்றனர். நான் திமுகவில் சேர போவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. நான் திமுக உள்ளிட்ட எந்த கட்சியிலும் சேர மாட்டேன். பாஜகவிலையே எனது பணி தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.