புதுடெல்லி: தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் வர்த்தக நடவடிக்கைகளையும் பல்வேறு சேவைகளையும் மேற்கொள்வதற்கு இது வகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுகளுக்குள் கணினி மயமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 1528 கோடி ரூபாய் ஆகும். இந்தக் கடன் சங்கங்கள் மூலம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் உட்பட 13 கோடி விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.