கர்நாடகா மாநிலத்தில் சளி மற்றும் காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டிபயாடிக் ஊசி போடப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சாகர் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜூன் 26 ஞாயிற்றுக்கிழமை அன்று காய்ச்சல் மற்றும் சளி காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ஆன்டிபயாடிக் ஊசிகள் செலுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 10 மாதம் முதல் 12 வயதுடைய, சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமடைந்தது. சிகிச்சையில் இருந்த குழந்தைகளில் 10 மாத குழந்தை உட்பட நான்கு குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமடைந்ததால் ஷிவ்மொக்கா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் உடல்நிலை மோசமானதற்கு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. சாகர் நகர் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பிரகாஷ் போஸ்லே, ஷிவ்மொக்கா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசியுள்ள சாகர் நகர் பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரதாலு ஹாலப்பா, ’சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். குழந்தைகளை உடனடியாகப் பரிசோதிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். முதற்கட்ட தகவலில் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட மருந்தைப் பொறுத்தவரையில் எங்கிருந்து சப்ளை செய்யப்பட்டது என்று விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார்.