அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்குக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002-2006 ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.
image
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது குறித்து விளக்கமளிக்க அமலாக்கப் பிரிவு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்று ஜூலை 14-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அதுவரை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.