லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாள்களை எட்ட உள்ள நிலையில், இலக்குகளை திட்டமிட்டப்படி அடையுமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பாஜ வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 2வது முறையாக மார் 25ம் தேதி பதவியேற்றது. அதனைத்தொடா்ந்து அனைத்து துறைகளுக்கும் முதல் 100 நாள்கள், 6 மாதங்கள், ஓராண்டு என 5 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்நிலையில், ஜூலை 5ம் தேதியுடன் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாள்கள் நிறைவடைய உள்ளது. இதையொட்டி லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத்தின் அரசு இல்லத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த கூட்டத்தில், முதல் 100 நாள்களில் நிறைவேற்ற வகுக்கப்பட்ட திட்டங்களை ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்குமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.