ஆட்டோ – மொபட் மோதல் இருவர் பலி: 7 பேர் காயம் – பண்ருட்டி அருகே கோர விபத்து

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ஆட்டோ – மொபட் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் இறந்தனர். 7 பெண்கள் படுகாயமடைந்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கட்டியாம்பாளையம், பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி புஷ்பா,45; கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த சிவகாமி,55; நிஷாந்தி,25; ரமணி,33; பாக்கியலட்சுமி,45; மலர்கொடி,60; செண்பகம்,45; சின்னபொண்ணு,55, ஆகிய 8 பேரும் ஆட்டோவில் அரசூர் சென்று, அங்கிருந்து மேல்மலையனுார் கோவிலுக்குச் செல்ல முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று மாலை 5 மணியளவில் 8 பேரும் ஆட்டோவில் (டி.என்.31.சி.எக்ஸ்.9019) அரசூர் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை அங்குசெட்டிப்பாளையம் அரிதாஸ் ஓட்டி சென்றார்.

மணம் தவிழ்ந்த புத்துார் விநாயகர் கோவில் அருகில் சென்றபோது எதிரே வந்த மொபட் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில், மொபட்டில் வந்த கோட்லாம்பாக்கம் பெயிண்டர் சதீஷ்குமார், 36, ஆட்டோவில் சென்ற புஷ்பா, 45, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆட்டோ டிரைவர் அரிதாஸ் லேசான காயத்துடன் தப்பிச் சென்றார். மேலும், ஆட்டோவில் இருந்த சிவகாமி, நிஷாந்தி, ரமணி, பாக்கியலட்சுமி, மலர்கொடி, செண்பகம், சின்னபொண்ணு ஆகிய 7 பேரும் பலத்த காயங்களுடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.