திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் மணிகண்டன். இவர் இன்று பணியில் இருக்கும் பொழுது அரித்துவாரமங்கலம் கடை தெருவில் பொதுமக்களிடம் ஒருவர் கத்தியை வைத்துக்கொண்டு கலாட்டா செய்து தொந்தரவு கொடுத்துள்ளார். கடைதெருவில் செல்பவர்கள் மீது கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமான வார்த்தைகளை சொல்லி தொல்லை தருவதாக காவல் நிலையத்திற்கு வந்து ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
புகாரை ஏற்று உடனடியாக அங்கு விரைந்த காவலர் மணிகண்டன் அங்கு கலாட்டா செய்து கொண்டிருந்த 25 வயது உடைய சூரியா என்பவரிடம் வீட்டுக்கு கிளம்பு என்று எடுத்து கூறி இருக்கிறார். “என்னை வீட்டுக்கு கிளம்பு என்று சொல்வதற்கு நீ யார்?” என்று காவலரிடம் வாக்குவாதம் செய்து கொண்டே கையிலிருந்த கத்தியால் கழுத்தையும் காதுமடலையும் கீறியுள்ளார் சூர்யா.
கடைத்தெருவில் இருந்தவர்கள் ஓடிவந்து காவலரோடு சேர்ந்து சூரியாவை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் சூர்யா தப்பி ஓடி விட்டார். காயம்பட்ட காவலர் மணிகண்டன் உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கலாட்டா செய்யும் சூர்யாவின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலாட்டா செய்த இளைஞரை தட்டி கேட்ட காவலர் மீது நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM