கஞ்சா வியாபாரிகளின் ரூ. 5.50 கோடி சொத்துகள் முடக்கம்

மதுரை: மதுரையில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதானவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமான ரூ. 5.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.மதுரை, ஒத்தக்கடையில் உள்ள அபார்ட்மென்ட் குடியிருப்பில் 170 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக முனிச்சாலை பகுதியை சேர்ந்த காளை, இவரது மனைவி பெருமாயி மற்றும் பேரையூர் அருகே உள்ள கம்மாளபட்டியை சேர்ந்த அய்யர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா விற்கும் தொழில் செய்து, அதில் ஈட்டிய பணத்தையும், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்களையும், உறவினர்களின் பெயர்களில் வாங்கிய சொத்துக்களையும் பறிமுதல் செய்யலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில், இந்த 3 பேரின் சொத்துக்களையும் உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கஞ்சா வழக்கில் கைதான இந்த 3 பேரின் மற்றும் இவர்களது உறவினர்களின் வங்கி கணக்கு விபரங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கணக்கெடுத்து முடக்கம் செய்தனர். இதன்படி மதுரை காமராஜர் சாலையில் உள்ள வீடுகள், வீட்டடி மனைகள், முனிச்சாலை மற்றும் புது மீனாட்சிபுரத்தில் உள்ள 3 மாடி அடுக்குமாடி குடியிருப்புகள், சூரக்குண்டு மற்றும் இலந்தைகுளம் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள் மற்றும் வீட்டடி மனைகள் என சுமார் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.