தேவாலயம் ஒன்றில் ஞானஸ்தானம் எடுப்பதற்காக குளியல் தொட்டியில் மூழ்கி எழுந்த இளைஞர் ஒருவர் மீது அருகில் வைக்கப்பட்டிருந்த மைக் உரசியதால் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். புது நன்மைக்கு ஜெபம் சொன்ன பாதிரியாரை மிரள வைத்த சம்பவத்தின் நேரடி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சலிஸ்பரி பார்க் தேவாலயத்தில் இளைஞர் ஒருவருக்கு ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புது நன்மை எடுக்கும் இளைஞரை தேவாலயத்தில் உள்ள புனித நீர் தொட்டிக்குள் இறக்கிய பாதிரியார் அவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். பாதிரியார் ஜெபிப்பது தேவாலயத்தில் இருப்பவர்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக தண்ணீர் தொட்டிக்கு அருகில் மைக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அந்த இளைஞருக்கு ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்ச்சியை பெற்றோரும் உற்றாரும் தேவாலயத்தில் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இளைஞரின் மூக்கில் தண்ணீர் புகுந்து விடக்கூடாது என்று வாயையும் மூக்கையும் சேர்த்து பொத்திய பாதிரியார் , அந்த இளைஞரை குழந்தையை போல நினைத்து புனித நீர் தொட்டியில் முக்கி எடுத்தார்
அப்போது தண்ணீர் தொட்டியின் விழிம்பை பிடித்துக் கொண்டு தண்ணீரில் இருந்து எழுந்த அந்த இளைஞரின் முதுகில், எதிர்பாராதவிதமாக அருகில் வைக்கப்பட்டிருந்த மைக் உரச, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் நிலைதடுமாறி தண்ணீருக்குள் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பதற்றத்தில் அவரது கைப்பட்டு அந்த மைக் ஸ்டேண்டோடு தண்ணீருக்குள் விழுந்ததால் மின்சார தாக்குதல் வேகம் அதிகரித்தது, ஆசி வழங்கிய பாதிரியார் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.
உறவினர்கள் செய்வதறியாது பதறியபடி நிற்க , உடனடியாக ஓடிச்சென்ற ஒருவர் மைக் ஸ்டேண்டை வெளியில் எடுக்க மைக் மட்டும் தண்ணீர் தொட்டிக்குள் கழண்டு விழுந்தது, மற்றொருவர் மைக்கின் இணைப்பை துண்டித்து மின்சாரத்தை நிறுத்தினாலும், அந்த சில நொடிகள் உடலில் மின்சாரம் பாய்ந்தது
உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் இந்த இளைஞரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. குளியல் தொட்டிக்கு அருகே வைக்கப்படும் மின்சாதன பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டால் என்ன மாதிரியான விபரீதத்தை கொண்டு வரும் என்பதற்கு எச்சரிக்கையாக மாறி இருக்கிறது இந்த சம்பவம்.