ராஜஸ்தான் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு – திட்டவட்டமாக மறுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்,

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரர் ஒருவர், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும், குறிப்பாக ராஜஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இருவரால் கன்னையா லால் அவரது கடையில் வைத்து கொல்லப்பட்டார். அதன்பின்னர், இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட தவாத்-இ-இஸ்லாமி என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரில், ஒருவர் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தாவத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்த நபர் என்பதும், மேலும் அந்த நபர் 2014ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் ராஜஸ்தான் திரும்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த படுகொலை தொடர்பாக இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பு இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக, பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இதுபோன்ற எந்த உள்நோக்கங்களையும் நாங்கள்(பாகிஸ்தான்) திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.

பாகிஸ்தானை நோக்கி விரலைக் காட்டி, இந்தியா தங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதன் மூலம், நாட்டை கேவலப்படுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சி இது.மக்களை தவறாக வழிநடத்தும் இத்தகைய தீய முயற்சிகள், இந்தியாவிலோ அல்லது உலக அரங்கிலோ, மக்களை தவறாக வழிநடத்துவதில் வெற்றி பெறாது.

இவ்வாறு பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.