வில்லனாக ஆசை! – அரவிந்த்சாமி #AppExclusive

னக்குத் தமிழ் தெரியுமா..?”- மணிரத்னம் கேட்டது ஒரே கேள்விதான். ஏற்கெனவே இந்த இளைஞர் நடித்த சில விளம்பரப் படங்களை மணிரத்னம் பார்த்திருந்தார்.” `ஓ… நல்லாவே…’ என்று சந்தோஷமாய்ச் சொன்னேன். ஸ்க்ரீன் டெஸ்ட் நடந்தது. நான் நடிகனாய் செலக்ட் ஆனேன்.”- சிரித்தார் அரவிந்தசாமி.

‘தளபதி’யில் கலெக்டர் ‘ரோஜா’வில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்; கிராமத்து ‘குழந்தை’யாகத் ‘தாலாட்டு’.மூன்றே படங்கள். இப்போது எல்லோருக்கும் அரவிந்தசாமியைத் தெரியும்!

I want to play villain roles – Arvind Samy

குறும்பு மின்னும் கண்கள்; குழந்தைத்தனம் மாறாத வசீகரம்; அபார உயரம் ஈடு கொடுக்கும் உடற்கட்டு; தோள் வரை புரளும் ஹேர் ஸ்டைல்; சரளமான ஆங்கிலம் – இதுதான் அரவிந்தசாமி!அரவிந்தசாமி நடிகர் என்பது ஒருபுறமிருக்க, அவரது தந்தையின் எக்ஸ்போர்ட் கம்பெனியான வி.டி. சுவாமி அண்ட் கம்பெனியின் டைரக்டர் என்ற முக்கிய பொறுப்பையும் வகிக்கிறார். பிஸியான படப்பிடிப்பு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் ஆபீஸ் நிர்வாக விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறார்.”என் சின்ன வயதெல்லாம் மெட்ராஸ் – பெங்களுர் ரூட்ல உள்ள ஒரு பண்ணை வீட்டில்தான் கழிந்தது.

I want to play villain roles – Arvind Samy

அப்புறம் மெட்ராஸ்தான். சிஷ்யா, டான்பாஸ்கோ ஸ்கூல் படிப்பு. அப்புறம் ‘லயோலா’ல பி.காம் முடித்தேன். உடனே அப்பாவோட நிறுவனமான திருச்சி காவேரி இன்ஜினீயரிங் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதுகூட ஒரு வருடம்தான். மறுபடியும் மெட்ராஸ். நான் பள்ளியில் படிக்கும்போதே பிரபல விளம்பரப் படத் தயாரிப்பாளரான ஜெயேந்திராவின் அலுவலகத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவர் என்னை மாடலிங் பண்ண ஜெயேந்திராவிடம் அழைத்துப் போனார். அதிலிருந்து ரஸ்னா, சாலிடெர், லியோ காபி என பல விளம்பரப் பட வாய்ப்புகள் கிடைத்தன.”

“பெரும்பாலும் மாடல்களின் அடுத்த லட்சியம் சினிமாதான் என்பதாலேயே நீங்கள் சினிஃபீல்டுக்கு வந்தீர்களா…? நடிப்பில் உங்களுக்கு அவ்வளவாக ஆர்வமில்லை என்றும் அயல்நாட்டில் படிக்கப் போகிறீர்கள் என்றும் கூட செய்திகள். இது வழக்கம்போல் பல நடிகர், நடிகைகள் ‘நான் சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால் டாக்டராகியிருப்பேன், இன்ஜினியராகி யிருப்பேன்’ என்று சொல்வது போலவா, உண்மையா?”

நீளமாய் கேள்வி கேட்டதும் நிதானமாய் சிரித்த அரவிந்த்… “நடிப்பில் ஆர்வமில்லை என்று சொல்வதைவிட எனக்குப் படிப்பில் ஆர்வம் இருக்கிறது என்பதுதான் பொருத்தம். நான் ‘ரோஜா’ முடித்தவுடனேயே அமெரிக்கா போய் விட்டேன். அங்கே நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் எம்.பி. ஏ. அட்மிஷன் எனக்குக் கிடைத்தது. சேர்ந்து விட்டேன். ஆனால், சேர்ந்த சில மாதங்களிலேயே ‘அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என்ற தகவல் வர, உடனே சென்னை திரும்பியவன்தான்!ஆனால், ஒன்றிரண்டு வருடங்களில் மீண்டும் நான் அமெரிக்கா போய் என் படிப்பைத் தொடரப் போகிறேன்.”

“படிப்பில் ஆர்வம் இருந்தால் இங்கேயே படிக்கலாமே?”

“நான் படிக்க இருப்பது சர்வதேச அளவிலான பிஸினஸ் விஷயங்கள் பற்றியது. அதற்கு அந்த அமெரிக்கப் பல்கலைக்கழகம் பெயர் பெற்றது. தவிர, எனக்கும் ஒரு சேஞ்ச் வேண்டும் என்பதற்காகத்தான் அமெரிக்கா பயணமே!”

“ஒகே… படிப்பு முடித்த பிறகு என்ன செய்வதாக ஐடியா?”

“அது எனக்கே தெரியாத விஷயம்.அது பற்றி நான் இன்னும் சிந்திக்கவில்லை. சொல்ல முடியாது… நான் சமூக சேவையில் இறங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்ல. அப்படி ஒரு யோசனை கூட உண்டு.”

“அமெரிக்கா போகும்வரை நடித்துக் கொண்டுதானே இருப்பீர்கள்?”

“ஓயஸ்! ஆனால், நான் ஒவ்வொரு படத்தையும் கதையைக் கேட்டு என்னுடைய ரோல் பற்றியும் தெரிந்து கொண்டு எனக்குச் சம்மதம் என்றால் தான் ஒப்புக்கொள்வேன். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும், வித்தியாசமாகச் செய்துகாட்ட வேண்டும் என்கிற ஆர்வம்தான் காரணம்.”

“வித்தியாசம் என்கிற பெயரில் ‘தாலாட்டு’ படத்தில் நீங்கள் ஏற்றிருக்கும் கிராமத்து வேடம் உங்களுக்குப் பொருத்தமாக இல்லை என்று ஒரு பேச்சு…”

“இதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். யார் விமரிசிக்கிறார்கள்? சில ஆங்கிலப் பத்திரிகைக்காரர்கள்தானே. என்னை விமரிசிக்கும் இவர்களுக்கு முதலில் கிராமத்து பாஷை பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? ‘தாலாட்டு’ படத்தில் நான் பேசும் கொங்கு பாஷை சரியில்லை என்று எழுதுகிறார்கள். ஆனால், கோயம்புத்தூரில் இந்தப் படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. அப்படியானால் அந்த ஊர் மக்களே என்னை அந்த ரோலில் ஏற்றுக் கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்.

நீங்களாகவே எதற்கு எனக்கு ஒரு இமேஜ் குத்துகிறீர்கள்..? என்னை ‘தளபதி’யிலும், ‘ரோஜா’விலும் ஒரே மாதிரி பாணியில் பார்த்துவிட்டு இப்போது கிராமத்தானாக என்னைப் பார்க்க உங்களுக்குப் புதிதாய் இருக்கலாம். ஆனால், என் முதல் படத்தையே நான் கிராமத்து ரோலில் செய்திருந்தால் என்னை ஒப்புக்கொண்டிருப்பீர்களோ… என்னவோ.”

I want to play villain roles – Arvind Samy

“அது சரி, உங்களுக்குப் பத்திரிகைகள் மீது ஏன் இப்படி ஒரு கோபம்?”

“ஒரு விஷயம்… நான் எப்போதுமே பப்ளிஸிடியை வெறுப்பவன். போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்வது, பேட்டி கொடுப்பது இதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயங்கள். இது வரை இவற்றைத் தவிர்த்து வந்திருக்கிறேன். இனியும் அப்படித்தான்.தவிர, பத்திரிகைகள் எப்போதுமே தங்களுக்குச் சரி என்று தோன்றியதை எழுதவேண்டும் என நினைப்பவன் நான். உதாரணமாக – ஒரு நடிகர் அபாரமாக நடிக்கிறார் என்றால், அதை உடனே உங்கள் மனதுக்குத் தோன்றியவாறு பாராட்டி எழுதுங்கள். அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, அவருக்கு ஒரு அவார்டு கிடைத்தவுடன் எழுதித் தள்ளுவது செயற்கையான விஷயம்.

சொல்லப் போனால், சத்யஜித்ரேக்கு ஆஸ்கார் கிடைத்த பிறகும் அவர் மறைந்த பிறகும் அவரைப் பற்றி பத்திரிகைகளில் வருகிற ஏராளமான பாராட்டுக் கட்டுரைகளும் விமரிசனங்களும், அவர் உயிரோடு இருந்தபோதுதானே வந்திருக்க வேண்டும்” – பேசும்போதே லேசாகக் கோபம் தொனிக்கிறது.

“திடீரென அடுத்தவருக்கு டப்பிங் குரல் எல்லாம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களே?”

” ‘புதிய முகம்’ படத்தைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் சுரேஷ் மேனன் அணுகினார். எனக்கு அந்தக் கதையில் இஷ்டம் இல்லை. பிறகு தனக்குப் பின்னணி குரல் கொடுக்கச் சொல்லி சுரேஷ் மேனன் கேட்டபோது கொடுத்தேன். அவ்வளவு தான்… மற்றபடி டப்பிங் பேசுவது எனக்குத் தொழில் இல்லை.”

“திடீரென நீங்கள் கல்லூரி மாணவிகளின் கனவு நாயகனாக உருவாகி இருக்கிறீர்கள்… இதை எப்போது நீங்களே உணர்ந்தீர்கள்?”

“காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்… (சிரித்துவிட்டு) உங்களுக்குத் தெரியாத இன்னொரு தகவலை நான் சொல்லட்டுமா…எனக்கு குழந்தை ரசிகர்கள்தான் மிக அதிகம். அவர்களிடமிருந்துதான் அதிக பாராட்டுக்கள் வருகின்றன. குழந்தைகளுக்கு நானும் ஒரு ரசிகன். படவுலகத்துக்கு முழுக்குப் போடும் முன்பு இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று ஆசை. ஒன்று படத்தை இயக்குவது… நானே கைவசம் இரண்டு மூன்று ஸ்கிரிப்ட்களை வைத்திருக்கிறேன். அநேகமாக அதில் ஒன்றையே இயக்குவேன். இரண்டாவது… ஒரு படத்திலாவது வில்லனாக நடிக்க வேண்டும். நெகட்டிவ் ரோல்கள் செய்ய வேண்டும்…”வித்தியாசமான ஆசைதான்!

– ரமேஷ் பிரபா

படங்கள்: கே. ராஜசேகரன்

(12.09.1993 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.