புதுடில்லி: ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடக்கிறது. இதில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
காங்கிரஸ், திரிணமுல், தேசியவாத காங்., சிவசேனா, சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தன் வேட்புமனுவை, கடந்த 27ல் தாக்கல் செய்தார்.
மொத்தம் நான்கு செட் வேட்புமனுக்கள், தாக்கல் செய்யப்படுவது வழக்கம். முதல் செட் வேட்பு மனு, காங்கிரஸ் சார்பிலும், இரண்டாவது செட் வேட்பு மனு, தி.மு.க., சார்பிலும், மூன்றாவது செட் மனு, திரிணமுல் காங்., சார்பிலும், நான்காவது செட் வேட்பு மனு, சமாஜ்வாதி கட்சி சார்பிலும்தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், ஒரு செட்டில் கூட, சிவசேனா மற்றும் தேசியவாத காங்., தரப்பிலிருந்து, யாரும் முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை.
வேட்பு மனுதாக்கலின் போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடன் இருந்தும் கையெழுத்துப் போடவில்லை. சிவசேனா சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. மேலும், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஒவைசியின் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகிய கட்சிகளும், வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு, ஒரு பிரதிநிதியைக் கூட அனுப்பவில்லை.
‘நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்’ என, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கலின்போது நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது, அது உண்மையில்லை என்பது அம்பலமாகியுள்ளது.
மனுக்கள் தள்ளுபடி
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுபவர்களை, 50 எம்.பி.,க்கள்அல்லது எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிய வேண்டும். அதே போல, 50 எம்.பி.,க்கள் அல்லது எம்.எல்.ஏ.,க்கள் வழிமொழிய வேண்டும். அப்படி செய்யாத நிலையில் வேட்புமனு நிராகரிக்கப்படும். இந்த சட்டவிதியை எதிர்த்து டில்லியை சேர்ந்த மகராஜ் நவுஹாடியா என்ற சமூக ஆர்வலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர், 2007 முதல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து நிராகரிக்கப்பட்டுள்ளார்.இதேபோல், ஆந்திராவை சேர்ந்த டாக்டர் திருப்பதி ரெட்டி என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த இரு மனுக்களையும், நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.