* கத்தி, பிளேடு, ஷார்ப்பனர், காசோலையும் தப்பவில்லை* ஓட்டல், மருத்துவமனை அறைகளுக்கான சலுகை ரத்துசண்டிகார்: பேக்கிங் செய்யப்படாத பிராண்ட் அல்லாத உணவு பொருட்களுக்கு இருந்த வரி விலக்கை திரும்பப் பெற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காசோலை, அஞ்சலக சேவைகள், மருத்துவமனை அறை வாடகைக்கும் வரி விதிக்கப்படும். ஆயிரம் ரூபாய்க்கு கீழுள்ள ஓட்டல் அறை வாடகைக்கு வரி விதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகாரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான நிதியமைச்சர்கள் குழு, இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தது. அதில், வரி விதிப்பில் மாற்றங்கள் செய்வது, சில பொருட்கள், சேவைகளுக்கு வரி விலக்கு வழங்குவது, ரூ.1,000க்கு கீழ் உள்ள ஓட்டல் அறை வாடகை, அஞ்சலக சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன. இதுபோல், ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம், குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்தும் நேற்றைய கூட்டத்தில் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சர்கள் குழு சமர்ப்பித்த புதிய வரி விதிப்பு மற்றும் தொடர்பான பரிந்துரைகளுக்கு நேற்று ஒப்புதல் தரப்பட்டது.இதன்படி, பேக்கேஜ் செய்யப்பட்ட பிராண்ட் அல்லாத பொருட்களான தானியம் உள்ளிட்ட உணவு பொருட்கள் சிலவற்றுக்கு முன்பு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த விலக்கு தற்போது திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பேக்கிங் செய்யப்படாமல் சில்லறையில் விற்கும் பொருட்களுக்கு வரி விலக்கு தொடரும். அச்சிடுவது, எழுதுவது அல்லது வரைவதற்கு பயன்படுத்தப்படும் மைகள், கத்தி, பேப்பர் கத்தி, பென்சில் ஷார்ப்னர், முட்டைகளை சுத்தம் செய்வது, வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், எல்இடி லைட்கள், பட்டிகள், மின்னணு சர்க்கியூட்கள், வரைவதற்கான கருவிகள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. வங்கி காசோலைகளுக்கு வரி 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. உலக வரைபடம் உட்பட வரைபடங்கள், மேப்களுக்கு வரி 12 சதவீதம் விதிக்கப்படுகிறது. ரூ.1,000க்கு கீழ் உள்ள ஓட்டல் அறை கட்டணங்கள் மீது 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு வரி விதிப்பு கிடையாது. லேபிளுடன் பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அப்பளம், பன்னீர், தயிர், மோர், தேன், இறைச்சி, உலர் காய்கறிகள், பொரி, தாமரை விதை, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள் போன்றவற்றுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு இருந்தது. இது ரத்து செய்யப்பட்டு, 5 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இதுபோல் மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5,000க்கு மேல் உள்ள அறைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் செயற்கை உறுப்புகள், உபகரணங்கள் போன்றவற்றுக்கு வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. பொருட்களை அனுப்புவதற்கான கட்டணம் எரிபொருள் விலையையும் உள்ளடக்கியிருந்தால், நிபந்தனைகளுக்கு உட்பட்டு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறையும். மாநிலங்களுக்கு இடையே தங்கம், நகைகள் மற்றும் நவரத்தின கற்கள் அனுப்புவதில் மோசடியை தடுக்கும் வகையில், குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் ‘இவே’ பில் கட்டாயம் ஆக்குவது பற்றி மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இருப்பினும், இந்த உச்ச வரம்பு மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கலாம். சாலை, பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மயான கட்டுமானம் போன்ற ஒப்பந்தங்களுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. * அடுத்த கூட்டம் மதுரையில்…ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்று வருகிறது. அதன்படி, 47வது கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நடந்து முடிந்து உள்ளது. இந்நிலையில், 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.* ஜூலை 18 முதல் அமல்ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்று உயர்த்தப்பட்ட வரி விதிப்புகள் அனைத்தும் அடுத்த மாதம் 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.