தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு என 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 510 பதவியிடங்களில், 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே இரட்டை இலை சின்னத்தில் தான் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் Form A , Form B ஆகிய படிவங்களில் கையொப்பமிட்டு, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவரை அந்த படிவங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. நாளை மாலைக்குள் வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பது வெளியிடப்படும்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பெறவில்லை. இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட ஏதுவாக படிவங்களை அனுப்ப ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார். இதனை இபிஎஸ் பெறாததால், 34 கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.