சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்ததாக முன்னாள்அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் குடும்பத்துக்கு எதிரான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 2001 முதல் தற்போது வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர்,வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி அளவுக்கு சொத்துகளைகுவித்ததாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் புகார்தாரரான கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்திருந்த மற்றொருமனுவில், கே.பி.அன்பழகன், அவரது குடும்பத்துக்கு எதிராகலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குபதிவு செய்தபோதிலும், இன்னும்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி என்.சதிஷ்குமார், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.