டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பிறகு அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள்.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக கன்வார் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு கன்வார் யாத்திரை ஜூலை 14-ல் தொடங்கவுள்ளது. இதுகுறித்து உத்தராகண்ட் காவல் துறை இயக்குநர் அசோக் குமார் கூறும்போது, “உ.பி. டெல்லி, ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சண்டிகரை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இந்த ஆண்டு 4 கோடி கன்வாரியார்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதையொட்டி முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்” என்றார்.